இஸ்ரேல் தடை செய்த ஆவணப்படத்தை இயக்கிய புகழ்பெற்ற பாலஸ்தீன நடிகரும் இயக்குநருமான முகமது பக்ரி காலமானார்.
புகழ்பெற்ற பாலஸ்தீன நடிகரும் இயக்குநருமான முகமது பக்ரி (வயது 72), கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து, முகமது பக்ரி சிகிச்சை பலனின்றி காலமானதாக அவரது குடும்பத்தினர் இன்று (டிச. 25) தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நடிகர் முகமது பக்ரியின் மறைவுக்குப் பல்வேறு முக்கிய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த முகமது பக்ரி?
இஸ்ரேலின் வடக்கு மாவட்டத்தில் உள்ள பினா கிராமத்தில், 1953 ஆம் ஆண்டு பாலஸ்தீனக் குடும்பத்தில் பிறந்த முகமது பக்ரி, டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், ஹீப்ரு மற்றும் அரேபிய மொழிகளின் திரைப்படங்கள் மற்றும் மேடை நாடகங்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.
கடந்த 1980களில் வெளியான பல இஸ்ரேலிய திரைப்படங்களில், பாலஸ்தீனர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பல முக்கிய கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தார்.
மேற்கு கரை பகுதியில், இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, கடந்த 2003 ஆம் ஆண்டு முகமது பக்ரி இயக்கத்தில் “ஜெனின் ஜெனின்” எனும் ஆவணப் படம் உருவாக்கப்பட்டது. இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பற்றி அவதூறு பரப்புவதாகக் கூறி இந்தப் படத்துக்கு இஸ்ரேல் அரசு தடை விதித்தது.
இதனால், பல்வேறு வழக்குகளை இயக்குநர் முகமது பக்ரி சந்தித்து வந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு ‘ஜெனின் ஜெனின்’ ஆவணப்படத்தின் மீதான தடையை இஸ்ரேலின் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், இஸ்ரேல் ராணுவத்துக்கு பல ஆயிரம் டாலர் இழப்பீடு வழங்கவும் முகமது பக்ரிக்கு உத்தரவிடப்பட்டது.
இத்துடன், 2025 ஆம் ஆண்டு வெளியாகி ஆஸ்கருக்கு தேர்வான “ஆல் தட்ஸ் லெஃப்ட் ஆஃப் யூ” எனும் திரைப்படத்தில் இயக்குநர் முகமது பக்ரி மற்றும் அவரது மகன்கள் ஆடம், சாலே பக்ரி ஆகியோர் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: முதல் கிறிஸ்துமஸ் உரையில் காஸாவை நினைவுகூர்ந்த போப் 14 ஆம் லியோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.