ரஷியாவில் புதின் இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள்?
ரஷியாவில் விளாதிமீர் புதின் இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைன் மீது ரஷிய அரசு திங்கள்கிழமை(டிச. 29) இரவு சுமத்திய பரபரப்பு குற்றச்சாட்டுகளை உக்ரைன் அரசு நிராகரித்துள்ளது.
இது குறித்து, ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு ரஷியாவிலுள்ள அதிபர் விளாதிமீர் புதினின் இல்லத்தை, குறிவைத்து தாக்க, உக்ரைன் முயற்சித்தது. வடக்கு ரஷியாவின் நோவ்கோரோட் பகுதியில் நள்ளிரவில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல்களில் உக்ரைன் ராணுவம் 91 நெடுந்தூர ட்ரோன்களைப் பயன்படுத்தியதாகவும், ஆனால் அவையனைத்தும் ரஷிய விமானப் படையால் தகர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தாக்குதல்களில் எந்தவித சேதமோ காயங்களோ ஏற்படவில்லை என்றும் ரஷியா தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, உக்ரைன் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து உக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரஷிய அதிபர் இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள் உக்ரைனால் நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அவர் தெரிவித்திருப்பதாவது: “அமெரிக்காவின் ராஜாங்க முயற்சிகளை வரவேற்று அமைதி ஏற்பட அதிபர் டிரம்ப்பின் பிரதிநிதிகளுடன் உக்ரைன் தரப்பு நெருக்கமாக செயலாற்றி வருகிறது.
அப்படிப்பட்ட சூழலில், ரஷிய அதிபர் இல்லம் மீது தாக்குதல் என்று உக்ரைன் மீது ரஷியா சுமத்தும் பழி வெறும் கட்டுக்கதை. கீவ் மற்றும் உக்ரைனில் தங்கள் தாக்குதல் நடவடிக்கைகளை நியாயப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். மேலும், போரை முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளிலிருந்து விலகுவதற்காக ரஷியா எங்கள் மீது பழி சுமத்துகிறது.
இது, வழக்கமான ரஷியாவின் பொய்ப்படலங்களில் ஒன்று! கீவில் கடந்த காலங்களில், அமைச்சர்கள் வளாகம் உள்பட முக்கிய அரசு கட்டடங்களை ரஷியா தாக்கியுள்ளது.
ராஜாங்க முயற்சிகளை சீர்குலைக்கும் விதத்தில் உக்ரைன் எப்போதும் நடந்துகொள்ளாது. ஆனால் ரஷியா அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது வாடிக்கை. இதுவே எங்களுக்குள் இருக்கும் வித்தியாசங்களுள் ஒன்று.
அமைதியை நிலைநாட்டுவதற்கான செயல்பாடுகளை சீர்குலைக்கும் ரஷியாவின் நடவடிக்கைகளை நாம் அனுமதிக்க முடியாது. உலக நாடுகள் இப்போதும் அமைதியைக் கடைப்பிடித்து மௌனம் காக்க முடியாது” என்றிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.