டாலருடன் விளையாடினால் பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் 100 சதவீத வரியை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிக்ஸ் அமைப்பு செத்துவிட்டது என்ற குறிப்பட்டுள்ளார்.
அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்கு முன்பு, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருள்கள் இறக்குமதிக்கு அதிக வரியை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்ட டொனால்ட் டிரம்ப், பிரிக்ஸ் அமைப்புக்கு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்திருந்தார். இந்த அமைப்பின் நிறுவன நாடுகளில் முக்கியமானதாக இந்தியா விளங்குவது குறிப்பிடத்தக்கது.
பிரிக்ஸ் அமைப்பு மிக மோசமான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், டாலருடன் விளையாட வேண்டாம், ஒருவேளை அவர்கள் அவ்வாறு செய்தால், பிரிக்ஸ் நாடுகள் 100 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள நேரிடும். ஒருவேளை, டாலருக்கு நிகரான நாணயத்தைக் கொண்டு வருவேன் என்று அவர்கள் சொல்லும் நாளில், மீண்டும் வந்து என்னிடம், நாங்கள் கெஞ்சிக் கேட்கிறோம் என்று கெஞ்சும் நிலை ஏற்படும்.
நான் குறிப்பிட்ட நாளிலேயே பிரிக்ஸ் செத்துவிட்டது என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார்.
அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு பணத்தின் மூலம் பரிவா்த்தனைகளை மேற்கொள்ள ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு நாடுகள் முயற்சித்தால் அந்த நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபராக பதவியேற்கும் முன்பே டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடியின் சந்திப்புக்கு முன் இன்று மீண்டும் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. துருக்கி, அஜா்பைஜான் மற்றும் மலேசியா உள்ளிட்ட சில நாடுகள் இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினா்களாக சேர விண்ணப்பித்துள்ளன. இந்நிலையில், டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளாா்.
பிரிக்ஸ் மாநாட்டில்
கடந்த அக்டோபா் மாதம் ரஷியாவில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சிமாநாட்டில் அதிபா் புதின் பேசுகையில், ‘அமெரிக்க டாலரை பயன்படுத்த முடியாது எனக் கூறவில்லை. ஆனால், அதைப் பயன்படுத்தவிடாமல் எங்களை தடுக்கும்பட்சத்தில் மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது’ என்றாா்.
உலக அளவில் வா்த்தக பரிவா்த்தனை தற்போது ‘ஸ்விஃப்ட்’ எனப்படும் உலக வங்கியின் வலைப்பின்னல் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக புதிய பரிவா்த்தனை அமைப்பை உருவாக்கவும், மேற்கத்திய நாடுகளுடன் அதன்மூலம் வா்த்தகத்தை சுமுகமாக நடத்தவும் ரஷியா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.