முகப்பு
உலகம்

தென் கொரியாவில் பதற்றம்! பதவி விலகியுள்ள அதிபர் யூன் சுக் இயோல் கைது

தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலுக்கு எதிராக நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது.

Updated On : 15 ஜனவரி, 2025 at 3:14 PM
- AP
பகிர்:

சியோல் : தென் கொரிய அதிபா் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ள யூன் சுக் இயோலை நிரந்தரமாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மிகுந்த பரபரப்புக்கிடையே அவர் இன்று(ஜன. 15) கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் கொரிய வரலாற்றில் அதிபர் பதவி வகித்து வருபவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

கைது நடவடிக்கைக்கு என்ன காரணம்?

முன்னதாக, தென் கொரிய நாடாளுமன்றத்தை முடக்க எதிா்க்கட்சியினா் முயற்சிப்பதாகவும், வட கொரியாவுக்கு ஆதரவாக அவா்கள் செயல்படுவதாகவும் தெரிவித்து, கடந்த மாதம் தென் கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாகக் கடந்தாண்டு டிசம்பரில் இயோல்(64) அறிவித்தாா். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிா்ப்பு எழுந்ததையடுத்து, அந்த அறிவிப்பை அவா் திரும்பப் பெற்றாா்.

எனினும் இந்த விவகாரம் தொடா்பாக அவரை பதவிநீக்கம் செய்து எதிா்க்கட்சியினா் நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றினா். இதையடுத்து, அவா் தற்காலிகமாக பதவி விலகினாா். எனினும், தற்போது வரை அவரே அதிபராக நீடிக்கிறார்.

இந்த நிலையில் அவரை நிரந்தரமாகப் பதவிநீக்கம் செய்வது தொடா்பாக அரசியல் சாசன நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அதேவேளையில், அவசரநிலை அறிவிப்பு தொடா்பாக இயோலுக்கு எதிராக நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து, அவரை காவல் துறையினா் கைது செய்ய கடந்த சில நாள்களாக முயற்சித்து வந்த நிலையில், அவா்களை இயோலின் பாதுகாவல் படையினா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, தங்களின் முயற்சியைக் கைவிட்டு காவல் துறையினா் திரும்பிச் சென்றனா்.

இந்த நிலையில், அவர் இன்று(ஜன. 15) கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஊழல் விசாரணை அலுவலக(சிஐஓ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தன் மீதான குற்ரசாட்டுகல் குறித்த விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கப் போவதாக இயோல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.