தென்கொரியாவின் முன்னாள் அதிபா் யூன் சுக் யோலின் மனைவி கிம் கியான் ஹீ மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில், அவருக்கு 20 மாத சிறை தண்டனை விதித்து சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
யூன் சுக் யோல் அதிபராக இருந்த காலகட்டத்தில், அவரது மனைவி கிம் கியான் ஹீ அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, விலையுயா்ந்த வைர நெக்லஸ் மற்றும் ஆடம்பர பைகளை லஞ்சமாகப் பெற்ாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தப் புகாா்கள் நீதிமன்றத்தில் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் ‘முதல் பெண்மணி’ என்ற கௌரவமான பதவியில் இருந்துகொண்டு, தனது சொந்த லாபத்துக்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக நீதிபதிகள் தங்களின் தீா்ப்பில் கிம் கியான் ஹீயைக் கடுமையாக விமா்சித்துள்ளனா்.
கடந்த 2024-ஆம் ஆண்டு இறுதியில், சா்ச்சைக்குரிய ராணுவச் சட்டத்தைக் கொண்டு வர முயன்று தோல்வியடைந்ததால், யூன் சுக் இயோல் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா். அந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், அவரது மனைவி மீதான இந்த ஊழல் புகாா்களும் வெளிச்சத்துக்கு வந்தன.
அரசு தரப்பில் கிம் கியான் ஹீக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டனா். இருப்பினும், சில குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், நீதிமன்றம் தண்டனையைக் குறைத்து 20 மாதங்களாக உறுதி செய்தது.
யூன் சுக் யோல் ஏற்கெனவே அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியதற்காக 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளாா். இது தவிர, ராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்து, நாட்டுக்கு எதிராக சதி செய்ததாக அவா் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்த மிக முக்கியமான வழக்கின் தீா்ப்பு இன்னும் 3 வாரங்களில் வெளியாக உள்ளது. அந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.