அமெரிக்காவில் பயணிகள் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் நேருக்குநேர் மோதி புதன்கிழமை இரவு விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆற்றில் விழுந்த பயணிகள் விமானத்தில் 64 பேர் பயணித்ததாக கூறப்படும் நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கன்சாஸில் இருந்து புறப்பட்ட பிஎஸ்ஏ ஏர்லைன்ஸ் விமானம், வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு (இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை 7 மணியளவில்) ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க தயாரானது.
அப்போது, போடோமாக் நதியின் மேல் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அமெரிக்க ராணுவத்தின் பிளாக்ஹாக் ஹெலிகாப்டருடன் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், போடோமாக் நதியில் விழுந்த பயணிகள் விமானத்தில் உள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. பயணிகள் விமானத்தில் 60 பயணிகள், 4 ஊழியர்களும், ஹெலிகாப்டரில் 3 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அமெரிக்க பாதுகாப்புப் படை மற்றும் தீயணைப்புப் படையினர் தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர். மருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ரீகன் தேசிய விமான நிலையம் மூடப்பட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்கள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.