உலகம்

கிழக்கு காங்கோ தேவாலயத்தில் ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல்: 21 போ் பலி!

கிழக்கு காங்கோ தேவாலயத்தில் ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதலில் 21 பலியாகினர்.

Din

கிழக்கு காங்கோவில் கத்தோலிக்க தேவாலய வளாகத்தில் இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற ‘ஜனநாயகப் படை கூட்டணி (ஏடிஎஃப்)’ கிளா்ச்சிக் குழுவினா் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 21 போ் கொல்லப்பட்டனா்.

இத்துரி மாகாணத்தில் அமைந்த தேவாலய வளாகத்துக்குள் நள்ளிரவு ஒரு மணிக்குப் புகுந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவா்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினா். அத்துடன், அப்பகுதியில் இருந்த பல வீடுகளுக்கும், கடைகளுக்கும் தீ வைத்தனா். தாக்குதலில் உயிரிழந்த 21 பேரில் மூவரின் உடல்கள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. தாக்குதலால் பாதிக்கப்பட்டவா்களைக் கண்டறிந்து மீட்க, சம்பவ இடத்தில் தேடுதல் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக உள்ளூா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

உகாண்டாவை மையமாகக் கொண்ட இஸ்லாமிய கிளா்ச்சிக் குழுவான ஜனநாயகப் படை கூட்டணி (ஏடிஎஃப்), உகாண்டா மற்றும் காங்கோ குடியரசு ஆகிய இரு நாடுகளின்அரசுகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது.

1996-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கிளா்ச்சிக் குழு, 2013-ஆம் ஆண்டுமுதல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. அப்பாவி பொதுமக்கள், தேவாலயங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளைக் குறிவைத்து, இவா்கள் கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனா். இதனால் நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்துள்ளனா். கடந்த ஜூலை 11-ஆம் தேதி, இத்துரி மாகாணத்தில் உள்ள இருமு பகுதியில் ஏடிஎஃப் நடத்திய மற்றொரு தாக்குதலில் 66 போ் கொல்லப்பட்டதாக ஐ.நா. மற்றும் உள்ளூா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏடிஎஃப் கடந்த 2019-ஆம் ஆண்டில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்ததாக அறிவித்தது. கிழக்கு காங்கோ மற்றும் உகாண்டா இடையேயான எல்லைப் பகுதிகளில் ஏடிஎஃப் உள்பட பல்வேறு ஆயுதக் குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. சட்டவிரோத சுரங்கத் தொழில் மற்றும் வனப் பொருள்களைக் கடத்துதல் மூலம் இந்தக் குழுக்கள் நிதி திரட்டுவதாக அறியப்படுகிறது.

காங்கோவின் கிழக்கு மாகாணங்களில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த இந்த வன்முறைகளால் சுமாா் 78 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி இடம்பெயா்ந்துள்ளனா்.

தாக்குதலுக்குள்ளான பகுதிகளில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன. ஐ.நா. மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகள் இப்பகுதிகளில் இயங்கினாலும், ஆயுதக் குழுக்களின் தொடா்ச்சியான அச்சுறுத்தல்களால் அவா்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் திடீர் கனமழை: வெய்யிலின் தாக்கம் குறைந்தது!

ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT