அமெரிக்கா மற்றும் சீனா இடையில் வர்த்தகப் போர் நடைபெற்று வரும்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்பட பல்வேறு நாடுகளிடையே வரிவிதிப்புகளை மேற்கொண்டார். சீனா மீது 34 சதவிகித வரியை விதித்தார்.
இதனையடுத்து, அமெரிக்கா மீது சீனாவும் வரியை விதித்தது. இந்த வரிப்போரானது, சீனா மீது அமெரிக்கா 145 சதவிதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவிகித வரியும் உயர்த்தும் அளவுக்கு கொண்டு சென்றது. இதனால், உலகளவிய பங்குச்சந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
இறுதியாக, இரு நாடுகளும் 90 நாள்களுக்கு வரி விதிப்பை ஒத்திவைப்பதாக பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டன.
இருப்பினும், ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக, அவ்விரு நாடுகளும் குற்றஞ்சாட்டிக் கொண்டன. இதனிடையே, சீன அதிபர் ஸி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்தது.
இதுகுறித்து, புதன்கிழமையில் டிரம்ப் கூறுகையில், சீன அதிபர் ஸி ஜின்பிங்கை எப்போதுமே பிடிக்கும்; அது எப்போதும் தொடரும். இருப்பினும், அவர் மிகவும் கடினமானவர்; அதிலும், அவருடன் ஒப்பந்தம் மேற்கொள்வது என்பது மிக மிகக் கடினமானது என்று தெரிவித்திருந்தார்.
இருவரும் வியாழக்கிழமையில் மேற்கொண்ட பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.