இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் மத்தியஸ்தம் செய்ததாகக் கூற வேண்டாம் என டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி கறாராக நேற்று கேட்டுக்கொண்ட நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி உடனான சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் மீண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.
டிரம்ப்பின் இத்தகையப் பேச்சு, இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் 5 நாள்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அவர், இன்று அதிபர் டிரம்ப் உடன் வெள்ளை மாளிகையில் மதிய உணவு அருந்தினார்.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் கேபினட் அறையில் இன்று (ஜூன் 18) பிற்பகல் 1 மணியளவில் (உள்ளூர் நேரம்) அசீம் முனீருக்கு அதிபர் டிரம்ப் விருந்து உபசரித்தார்.
இந்த சந்திப்பிக்குப் பிறகு வாஷிங்டன்னில் செய்தியாளர்களுடன் பேசிய அதிபர் டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை தான் நிறுத்தியதாக மீண்டும் குறிப்பிட்டுப் பேசினார்.
ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் போரை நிறுத்த எந்தவித மத்தியஸ்தமும் நடைபெறவில்லை என்றும், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாலேயே போர் நிறுத்தம் செய்யப்பட்டது; இதில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என அதிபர் டிரம்ப் உடனான நேற்றைய தொலைபேசி உரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று கூறினார்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி உடனான சந்திப்புக்குப் பிறகு, அதிபர் டிரம்ப் மீண்டும் போர் நிறுத்தத்துக்கு தான் காரணம் என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, ''இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தினேன். பாகிஸ்தான் எனக்குப் பிடிக்கும். மோடி மிகச்சிறந்த நபர் என நினைக்கிறேன். அவருடன் நேற்று இரவு நான் பேசினேன். பிரதமர் மோடியுடன் நாங்கள் வணிக ஒப்பந்தம் செய்ய இருக்கிறோம்.
இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தலையிட்டு நிறுத்தினேன். பாகிஸ்தான் போரை நிறுத்துவதற்கு அசீம் முனீர் முக்கிய காரணம். இதேபோன்று இந்தியா தரப்பில் போரை நிறுத்த மோடி முக்கியமானவர். போரை நிறுத்த இவர்கள் இருவருமே செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தனர்.
இரண்டுமே அணு ஆயுத நாடுகள். அவர்கள் போரை நிறுத்த வேண்டும். இரு முக்கிய அணு ஆயுத நாடுகளுக்கு இடையே நான் போரை நிறுத்தியுள்ளேன்'' எனக் குறிப்பிட்டார்.
ஈரான் - இஸ்ரேல் போர் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ''நீண்டகால யுத்தத்தை நாங்கள் விரும்பவில்லை; எனக்கு ஒன்று மட்டும்தான் வேண்டும். அது, அணு ஆயுதங்களை ஈரான் வைத்திருக்கக் கூடாது என்பதுதான்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | பி-2 பாம்பர்ஸ் விமானங்கள் புறப்பட்டன? ஈரானின் நிலவறைகளை அழிக்கத் திட்டமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.