இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்துக்கு முழுமையாக ஒப்புக்கொண்டதை வரவேற்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு ஆசியப் பகுதியிலுள்ள இரு பெரும் நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த இரு வார காலமாக கடும் சண்டை நீடித்தது. அதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மீது ஞாயிற்றுக்கிழமை மிகத்துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக கத்தாா், இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் திங்கள்கிழமை(ஜூன் 23) இரவில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதனைத்தொடர்ந்து, இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்துக்கு முழுமையாக ஒப்புக்கொண்டதாக திடீரென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதனை வரவேற்று மத்திய அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஈரான் - இஸ்ரேல் இடையேயான சண்டை விவகாரத்தில் கடந்த ஓரிரவில் நடைபெற்ற மேம்பாடுகளை இந்தியா உற்று நோக்கி வந்துள்ளது. அதில், ஈரானிலுள்ள அணுசக்தி தளவாடங்கள் மீதான அமெரிக்காவின் நடவடிக்கை, அதற்கு ஈரான் பதிலடியாக கத்தாரிலுள்ள அமெரிக்க ராணுவ தளங்க்ள் மீது எடுத்த நடவடிக்கை ஆகியவை கவனிக்கததக்கவை. இவை அப்பிரந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை நீடிப்பது குறித்த கவலையை ஏற்படுத்தினாலும், இப்போது ஈரானும் இஸ்ரேலும் சண்டை நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டிருப்பதை இந்தியா வரவேற்கிறது.
இதில் அமெரிக்க, கத்தார் ஆற்றிய பங்கு வரவேற்கத்தக்கது.
இப்பிராந்தியத்தில் நிலவும் சண்டைக்கு தீர்வு காண, பேச்சுவர்த்தை மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை விடுத்து வேறெதுவும் சண்டைக்கு முடிவுகட்ட மாற்றாக அமையாதென்பதை இந்தியா மீண்டுமொருமுறை வலியுறுத்திக் கொள்கிறது.
இப்பிராந்தியத்தில் அமைதி நடவடிக்கைகளுக்கு இந்தியா துணை நிற்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பும், நிலைத்தன்மைக்காகவும் நீடித்த அமைதி நிலவவும் செயலாற்றுவார்கள் என்று நம்புகிறோம்.
இவ்வாறு வெளியுறவு விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.