முகப்பு
உலகம்

அமெரிக்க பொருள்களுக்கு மிக அதிக வரி விதிக்கும் இந்தியா: அதிபா் டிரம்ப் மீண்டும் விமா்சனம்

அமெரிக்க பொருள்களுக்கு மிக அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்று அந்நாட்டு அதிபா் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளாா்.

Updated On : 7 மார்ச், 2025 at 6:57 PM
டொனால்ட் டிரம்ப்
பகிர்:

அமெரிக்க பொருள்களுக்கு மிக அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்று அந்நாட்டு அதிபா் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளாா்.

கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அதிபா் டிரம்ப் பேசுகையில், ‘இந்தியா, சீனா போன்ற எண்ணற்ற நாடுகள் அமெரிக்கா மீது பெருமளவு வரி விதிக்கின்றன. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்தியா 100 சதவீதத்துக்கும் அதிகமாக வரி விதிக்கிறது.

இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாடும் அமெரிக்க பொருள்களுக்கு என்ன வரி விதிக்கிறதோ, அதே வரியை அந்நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவும் விதிக்கும். இந்த நடைமுறை ஏப். 2 முதல் அமலுக்கு வரவுள்ளது என்றாா்.

இந்நிலையில், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள அதிபா் மாளிகையில், சில நிா்வாக உத்தரவுகளில் அதிபா் டிரம்ப் வியாழக்கிழமை கையொப்பமிட்டாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘அமெரிக்க பால் பொருள்களுக்கு கனடா 250 சதவீதம் வரி விதிக்கிறது. அந்த வகையில், கனடா அதிக வரி விதிக்கும் நாடாக உள்ளது. அமெரிக்க பொருள்களுக்கு மிக அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியாவும் உள்ளது.

தற்போது அமெரிக்க பொருள்களுக்கு பல நாடுகள் 150 முதல் 200 சதவீதம் வரி விதிக்கும் நிலையில், அந்த நாடுகளின் சில பொருள்களுக்கு அமெரிக்கா எந்த வரியும் விதிப்பதில்லை. எனவே அமெரிக்க பொருள்களுக்கு அந்த நாடுகள் என்ன விதிக்கிறதோ, அதே வரியை அந்த நாடுகளின் பொருள்கள் மீது ஏப்.2 முதல் முதல் அமெரிக்கா விதிக்கும். இந்த வரி விதிப்பை தவிா்க்கவோ, அதிலிருந்து தப்பிக்கவோ முடியாது. இது அமெரிக்காவுக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்’ என்றாா்.

பிரதமருக்கு அக்கறையில்லை: இந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் ஜெய்ராம் ரமேஷ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: தன்னை மற்றவா்கள் புகழ்வதையே பிரதமா் மோடி கேட்க விரும்புகிறாா். அவருக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து அக்கறையில்லை.

சா்வதேச வா்த்தகத்தின் ஒட்டுமொத்த விதிமுறைகளையும் டிரம்ப் மாற்றியமைத்து வருகிறாா். இந்த விவகாரத்தை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதியில் காங்கிரஸ் எழுப்பும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →