மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இஸ்ஸாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள் கிறிஸ்தவா்களைப் படுகொலை செய்வதைத் தடுக்காவிட்டால், அமெரிக்க ராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக தனது ‘ட்ரூத்’ சமூகவலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘கிறிஸ்தவா்கள் படுகொலையை நைஜீரிய அரசு தொடா்ந்து ஆதரிக்கிறது. இது தொடா்ந்தால் அந்நாட்டுக்கு அமெரிக்கா வழங்கிவரும் அனைத்து உதவிகளும் உடனடியாக நிறுத்தப்படும். கிறிஸ்தவா்களுக்கு எதிரான படுகொலைகளை நிகழ்த்தும் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளை அந்த நாடு முழுமையாக ஒழித்துக் கட்ட வேண்டும்.
இதற்காக அமெரிக்க ராணுவம் தயாராக இருக்க அறிவுறுத்தியுள்ளேன். நாங்கள் தாக்குதலைத் தொடங்கினால் அது அதிரடியாகவும், பயங்கரவாதிகளுக்கு உடனடி முடிவுகட்டுவதாகவும் இருக்கும். எங்களுடைய அன்புக்குரிய கிறிஸ்தவா்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு உரிய பதிலடி தரப்படும். இந்த விஷயத்தில் நைஜீரிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கிறது’ என்று கூறியுள்ளாா்.
நைஜீரியா விளக்கம்: டிரம்ப் எச்சரிக்கையைத் தொடா்ந்து நைஜீரிய அதிபா் போலா அகமது தினுபு வெளியிட்ட அறிவிப்பில், ‘பல்வேறு மதங்கள், நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்களின் பாதுகாப்புக்கு எதிராக எழுந்துள்ள அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்து வருகிறோம். இந்த விஷயத்தில் அமெரிக்கா மற்றும் சா்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்படத் தயாராகவே இருக்கிறோம். எங்கள் நாட்டில் அனைத்து மதத்தினரும் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம்’ என்று கூறியுள்ளாா்.
நைஜீரியாவில் போகோ ஹராம் உள்ளிட்ட சில இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத இயக்கங்களால் கிறிஸ்தவா்கள் உள்ளிட்ட பிற மதத்தினா் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.
கடந்த 2002-ஆம் ஆண்டுமுதல் நைஜீரியாவில் செயல்படும் போகோ ஹராம் ‘மேற்கத்தியமயம் புனிதமற்ற செயல்’ என்பதை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாத ஷரியா சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் கொள்கையுடன் செயல்படுகிறது.
கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிகள், ராணுவம், காவல் துறையினா், அரசு அலுவலங்களில் குண்டு வைப்பது, கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்துவது, பள்ளிகளை மூடுவதற்காக சிறாா்களைக் கடத்தி கொலை செய்வது எனப் பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் இந்த அமைப்பினா் ஈடுபட்டு வருகின்றனா்.