மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாமிடம் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபரான கிளாடியா ஷீன்பாம் தலைநகர் மெக்சிகோ சிட்டி பகுதியில், நேற்று (நவ. 4) கல்வி அமைச்சகத்தின் அலுவலகம் நோக்கி அவரது குழுவுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் சென்ற மக்கள் அதிபர் ஷீன்பாமுடன் உரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அதிபர் ஷீன்பாமை கட்டியணைத்து அவரை முத்தமிட முயன்றார். அவரது பிடியில் இருந்து விலகிய ஷீன்பாம் அந்த சூழலை சிரித்தபடி கையாண்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதையடுத்து, மதுபோதையில் இருந்த அந்த நபர் கைது செய்யப்பட்டதாக, மெக்சிகோ சிட்டி மேயர் கிளாரா ப்ருகாடா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இதுபோன்ற துன்புறுத்தல்களுக்கு ஆளாவது இது முதல்முறை அல்ல என்று கூறிய அதிபர் கிளாடியா ஷீன்பாம் அந்த நபர் மீது புகாரளிக்க முடிவு செய்துள்ளதாக இன்று கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் பேசியதாவது:
“ஒரு பெண்ணாக நான் அனுபவித்த ஒன்று இது. ஆனால், நம் நாட்டில் பெண்களாகிய நாம் அனைவரும் அனுபவிக்கும் ஒன்று இது என்பதால் நான் குற்றச்சாட்டு புகாரளிக்க முடிவு செய்துள்ளேன். இதுபோன்று, நான் அதிபராவதற்கு முன்பே மாணவராக இருந்தபோது அனுபவித்திருக்கிறேன்” எனப் பேசியுள்ளார்.
இந்தச் சம்பவம், பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ள நிலையில் நாட்டின் அதிபருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. இத்துடன், இதுபோன்ற துன்புறுத்தல்களை மெக்சிகோவில் உள்ள பெண்கள் நாள்தோறும் அனுபவித்து வருவதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.