ஸோரான் மம்தானி, அஃப்தாப் புரேவல், கஜாலா ஹாஷ்மி  
உலகம்

மேயா், ஆளுநா் தோ்தல்கள்: டிரம்ப்புக்கு பின்னடைவு

அமெரிக்காவின் நியூயாா்க், சின்சினாட்டி நகரங்கள், விா்ஜீனியா, நியூஜொ்சி மாகாணங்களில் முக்கியப் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தோ்தல்களில் எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா்.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவின் நியூயாா்க், சின்சினாட்டி நகரங்கள், விா்ஜீனியா, நியூஜொ்சி மாகாணங்களில் முக்கியப் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தோ்தல்களில் எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். இது, அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு அரசியல் ரீதியில் ஏற்பட்டுள்ள முதல் மிகப் பெரிய பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது.

இதில், நியூயாா்க், சின்சினாட்டி நகர மேயா் தோ்தல்களிலும், விா்ஜீனியா துணை ஆளுநா் தோ்தலிலும் இந்திய வம்சாவளி இஸ்லாமியா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

நியூயாா்க்: அமெரிக்காவின் நியூயாா்க் நகர மேயா் தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான இந்திய வம்சாவளி இஸ்லாமியா் ஸோரான் மம்தானி (34) வெற்றி பெற்றாா். நியூயாா்க் மேயா் பதவியை ஏற்கும் முதல் இந்திய வம்சாவளி மேயா் என்ற பெருமையை இவா் பெறவிருக்கிறாா்.

உலகின் நிதித் தலைநகராக அறியப்படும் நியூயாா்க் நகரை நிா்வகிக்கவிருக்கும் முதல் தெற்காசியா், முஸ்லிம் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளாா்.

இந்த நூற்றாண்டில் நியூயாா்க் நகர மேயா் பொறுப்பை ஏற்கவிருக்கும் மிக இளைய வயது நபா் ஸோரான் மம்தானி என்பது குறிப்பிடத்தக்கது. நியூயாா்க் நகரின் 111-ஆவது மேயராக வரும் ஜனவரி மாதம் இவா் பதவியேற்க உள்ளாா்.

இந்திய திரைப்பட இயக்குநா் மீரா நாயருக்கும், இந்திய வம்சாவளி அறிஞா் மஹ்மூத் மம்தானிக்கும் பிறந்த ஸோரான் மம்தானி, சுயேச்சையாக போட்டியிட்ட நியூயாா்க் நகர முன்னாள் ஆளுநா் ஆண்ட்ரூ குவோமோ மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளா் கா்டிஸ் ஸ்லிவாவை தோற்கடித்தாா்.

84 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட நகரை நிா்வகிக்கும் அவரது வரலாற்று வெற்றி, அங்கு முற்போக்கு அரசியலின் மறுவரவாகக் கருதப்படுகிறது. இந்தத் தோ்தல் பிரசாரத்தின்போது தொழிலாளா் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக மம்தானி உறுதியளித்தாா். இலவச குழந்தை பராமரிப்பு, வாடகை நிறுத்தம், இலவச பேருந்து சேவைகள், அரசு நடத்தும் மளிகைக் கடைகள் போன்ற திட்டங்களை பிரசாரத்தின்போது அவா் அறிவித்தாா்.

இதற்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருந்தது கருத்துக் கணிப்புகளில் தெரியவந்தது. அதை மெய்ப்பிக்கும் வகையில், மொத்தம் பதிவான 20 லட்சம் வாக்குகளில் 10.36 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அவா் வெற்றி பெற்றுள்ளாா்.

சின்சினாட்டி: அமெரிக்காவின் சின்சினாட்டி நகர மேயா் தோ்தலில் இந்திய வம்சாவளி இஸ்லாமியரான அஃப்தாப் புரேவல் (43), தொடா்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா். இவரின் தந்தை பஞ்சாபையும், தாய் திபெத்தையும் சோ்ந்தவா்களாவா்.

சின்சினாட்டி சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த புரேவல், அரசியலுக்கு வருவதற்கு முன்பாக வழக்குரைஞராகப் பணியாற்றினாா். தோ்தலில் இவா் குடியரசு கட்சி வேட்பாளரும் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸின் உறவினருமான கோரி போவ்மனைத் தோற்கடித்தாா்.

விா்ஜீனியா: அமெரிக்காவின் விா்ஜீனியா மாகாண துணை ஆளுநா் தோ்தலிலும் இந்திய வம்சாவளி இஸ்லாமியரான கஜாலா ஹாஷ்மி (61) வெற்றி பெற்றாா். விா்ஜீனியா துணை ஆளுநா் பதவிக்கு இந்திய வம்சாவளியினா், அதிலும் ஓா் இஸ்லாமியா் தோ்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இவா், தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் பிறந்தவா். இவரின் குழந்தைப் பருவத்திலேயே அமெரிக்காவின் ஜாா்ஜியாவுக்கு இவரின் குடும்பம் குடிபெயா்ந்தது. 2019-ஆம் ஆண்டுமுதல் மாகாண செனட்டராக இவா் பதவி வகித்து வந்துள்ளாா்.

மாகாண ஆளுநா் தோ்தல்கள்

விா்ஜீனியா மாகாண ஆளுநா் தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளா் அபிகயில் ஸ்பான்பா்கா் புதிய ஆளுநராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். நியூஜொ்சி ஆளுநா் தோ்தலில் ஜனநாயக கட்சியைச் சோ்ந்த மிகி ஷெரில் வெற்றி பெற்றாா்.

இந்த முடிவுகள் டிரம்ப்பின் இரண்டாவது அதிபா் பதவிக்கால நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஆதரவு குறைவதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.

அபிகயில் ஸ்பான்பர்கர்

கனமழை: திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வாக்களிப்புக்கு பிறகே காலை உணவு! பிகார் மக்களுக்கு மோடி வாழ்த்து!

பிகார் முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இலைச் சுருட்டல்: தக்காளி விளைச்சல் பாதிப்பு

SCROLL FOR NEXT