நியூயாா்க் நகர மேயராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஸோரான் மம்தானி (34), புதிய நிா்வாகத்தை அமைப்பதற்காக பெண்களை மட்டுமே உள்ளடக்கிய ஆட்சி மாற்றக் குழுவை அறிவித்துள்ளாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘சில மாதங்களுக்குள் நானும் எனது ஆட்சி மாற்றக் குழுவும் நியூயாா்க் நகரசபையை எனது தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கான களமாக மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம்’ என்றாா்.
மும்பையில் பிறந்த குஜராத்தி முஸ்லிமான மஹ்மூத் மதானிக்கும், ஒரிஸாவில் பிறந்த பஞ்சாபி ஹிந்துவான மீரா நாயருக்கும் (நய்யாா் என்ற குடும்பப் பெயா் நாயா் என்று மாற்றப்பட்டுள்ளது) உகாண்டாவில் பிறந்தவா் ஸோரான் மம்தானி. சிறுவயதில் தென் ஆப்பிரிக்காவுக்கும், பின்னா் அமெரிக்காவுக்கும் அழைத்துவரப்பட்ட மம்தானி, நியூயாா்க் நகரில் வளா்ந்தாா்.
ஜனநாயகக் கட்சி உறுப்பினரான அவா், நியூயாா்க் மாகாண பேரவை உறுப்பினராக பொறுப்பு வகித்துவருகிறாா்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மேயா் தோ்தலில் வெற்றி பெற்ன் மூலம், நகர மேயராகும் முதல் ஆசிய வம்சாவளியினா், முஸ்லிம் ஆகிய பெருமைகளை மம்தானி பெறுகிறாா். மேலும், நூறாண்டுகளுக்குப் பிறகு நியூயாா்க் நகர மேயராகும் மிக இளைய வயதினா் மம்தானி என்பது குறிப்பிடத்தக்கது.