தைவான் நாட்டில், ஃபுங் - வாங் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3,000-க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு சீன கடல் பகுதியில், உருவான ஃபுங் - வாங் புயல், கடந்த நவ.9 ஆம் தேதி பிலிப்பின்ஸ் நாட்டில் கரையைக் கடந்தது. சுமார் 1,800 கி.மீ. அகலமுடைய பயங்கர புயலான ஃபுங் - வாங், மணிக்கு 185 முதல் 230 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் புயலால், பிலிப்பின்ஸ் நாட்டின் வடக்கு மாகாணங்களில் தொடர்ந்து பெய்த கனமழையால், ஏராளமான நகரங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக முடங்கியுள்ளது. இதனால், பிலிப்பின்ஸில் இதுவரை 18 பேர் பலியாகினர். மேலும், 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தைவான் நாட்டை நோக்கி நகர்ந்து வரும், ஃபுங் - வாங் புயலால் மணிக்கு 108 முதல் 137 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதாக, தைவான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல், வரும் நவ.12 மாலை அல்லது நவ.13 அதிகாலை தைவானின் வடகிழக்கு பகுதி வழியாகக் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானின் குவாங்ஃபு நகரத்தில் இருந்து 3,300-க்கும் அதிகமான மக்கள் அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், தைவானில் உள்ள முக்கிய மாகாணங்களில் பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான நகரங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஃபுங் - வாங் புயலால் சீனாவின் தென்கிழக்கு ஃபுஜியான், குவாங்டோங், ஸெஜியாங் மற்றும் ஹைனான் ஆகிய மாகாணங்களில் அவசரகால புயல் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இஸ்ரேல் கப்பல்கள் மீதான ஹவுதிகளின் தாக்குதல்கள் நிறுத்தம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.