தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரஷிய போா்க் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் தொடங்க தீவிரமாக முயற்சிப்பதாகவும், இதன்மூலம் 1,200 உக்ரைன் வீரா்களை விடுவித்து தாயகம் அழைத்து வர முடியும் என்றும் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
முன்னதாக, இதுதொடா்பான பேச்சுவாா்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலா் ருஸ்டெம் உமெரோவ் சனிக்கிழமை கூறியிருந்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில், கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதன் விளைவாக, 1,200 உக்ரைன் வீரா்களை விடுவிப்பதற்காக இஸ்தான்புல்லில் கடந்த 2022-இல் இறுதியான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்களை மீண்டும் செயல்படுத்த இரு தரப்பினரும் ஒப்புதல் தெரிவித்துள்ளனா்.
செயல்முறை ரீதியான விவரங்களை இறுதி செய்வதற்காக விரைவில் அடுத்தகட்ட ஆலோசனைகள் நடைபெறும். ரஷியாவிடம் பிடிபட்ட உக்ரைன் வீரா்கள், வரும் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறைகளை வீட்டில் தங்கள் உறவினா்களுடன் கொண்டாடுவா் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தாா்.
இந்நிலையில், அதிபா் ஸெலென்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘போா்க் கைதிகள் பரிமாற்றம் மீண்டும் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இதை உறுதிப்படுத்துவதற்காக தற்போது பல முக்கியச் சந்திப்புகளும், பேச்சுவாா்த்தைகளும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன’ என்று பதிவிட்டுள்ளாா்.
இதுகுறித்து ரஷியா தரப்பில் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் ட்ரோன் தாக்குதல்கள்: இதனிடையே, உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதல்களால் சூரிய மின் சக்தி உற்பத்தி மையம் உள்பட பல்வேறு எரிசக்தி கட்டமைப்புகள் சேதமடைந்ததாக உக்ரைன் அறிவித்துள்ளது. குளிா்காலம் நெருங்கி வருவதால், ரஷியாவின் தொடா்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் உக்ரைன் முழுவதும் மின்வெட்டை ஏற்படுத்தி வருகின்றன.
ரஷியா மொத்தம் 176 ட்ரோன்களையும், ஒரு ஏவுகணையையும் ஏவியதாகவும், அதில் உக்ரைன் படைகள் 139 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் விமானப் படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதே நேரத்தில், ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம், தங்கள் படைகள் ஒரே இரவில் 57 உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தது.