லண்டனில் சுமார் 100 ஆண்டுகளாக இயங்கி வரும் லண்டன் வீராசாமி உணவகத்தை மூட உத்தரவு வெளியாகியிருக்கும் நிலையில், அதனை எதிர்த்து உணவகம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
லண்டனின் ரெஜெண்ட் சாலையில் 99 ஆண்டுகளாக இயங்கி வரும் வீராசாமி உணவகம், அப்பகுதியின் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது.
மிகப் பழமையான இந்திய உணவகம் என்ற பெருமை மட்டுமல்லாமல், மறைந்த ராணி எலிசபெத், ஏராளமான இந்திய மற்றும் பிரிட்டன் தலைவர்கள் என பலரும் இங்கு வந்து உணவருந்தியிருப்பதும் மணிமகுடமாக அமைந்திருந்தது.
இந்த உணவகம் அமைந்திருக்கும் இடம், பிரிட்னின் கிரவுண் எஸ்டேட் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த உணவகத்துக்கான 100 ஆண்டுகள் குத்தகைக் காலம் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவு பெற்றிருக்கும் நிலையில், அந்தக் கட்டடத்தின் மேல் தளங்களில் அமைந்திருக்கும் அலுவலகங்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில், இந்த உணவகத்துக்கான குத்தகையை நீட்டிக்க கிரவுன் எஸ்டேட் மறுத்துவிட்டு, உணவகத்தை காலி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அதனை எதிர்த்து, குத்தகை பாதுகாப்பு விதிமுறைகளைப் பயன்படுத்தி நிவாரணம் தேட உணவகம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வீராசாமி உணவகத்துக்கு ஆதரவாக, பிரிட்டனின் புகழ்பெற்ற சமையல் கலை நிபுணர்களும் குரல் கொடுத்துள்ளனர்.
இந்த உணவகத்தில் ராணி எலிசபெத், இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உள்ளிட்டோர் இங்கு உணவருந்தியிருப்பதாகவும் வரலாறு தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு வழக்கு விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அதுவரை உணவகம் செயல்பட தடையில்லை என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.