கின்ஷாசா: காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள தாமிரச் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்த இடத்தைப் பார்வையிட்டுத் திரும்பிய சுரங்கத் துறை அமைச்சர் உள்பட 20 பேர் இருந்த விமானம் ஓடுதளத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்தது.
நல்வாய்ப்பாக, அதிலிருந்த அனைவரும் மீட்புப் படையினரால் துரிதமாக வெளியேற்றப்பட்டனர். அதனால் ஆச்சரியத்தக்க வகையில் ஒருவருக்கும் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கின்ஷாசாவிலிருந்து திரும்பிய விமானம், விமான ஓடுபாதையில் இறங்கியபோது, அதன் வால் பகுதி தரையில் மோதியதில் விமானம் தீப்பற்றியதாகவும், வால் பகுதியில் பற்றிய தீ விமானம் முழுவதும் பரவிய நிலையில், அதற்குள் மீட்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு அதிலிருந்தவர்களை மீட்டதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெளியாகும் விடியோக்களில், வால் பகுதியிலிருந்து தீ பரவுகிறது, ஒரு சிலர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியிலும், மற்றவர்கள் பயணிகளை வெளியேற்றுவதிலும் ஈடுபடுகிறார்கள்.
பெரும்பாலான பயணிகள் விமானத்தின் முன் படிகட்டு வழியாகவும், மற்றவர்கள் உடைந்த விமானத்தின் வழியாகவும் வெளியேறியிருக்கிறார்கள்.
விபத்துக்குள்ளான விமானம் ஏர்ஜெட் அங்கோலா நிறுவனத்தைச் சேர்ந்தது என்றும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
காங்கோ நாட்டின் தெற்கு மாகாணமான லுவாலபாவில் உள்ள கலாண்டோ சுரங்கத்தில் நேரிட்ட விபத்தில் 32 பேர் பலியாகினர்.
காங்கோவின் முலோண்டோ பகுதியில் அமைந்துள்ள கலாண்டோ சுரங்கப் பாலம் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து நேரிட்டதாகவும், தொடா்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருந்ததால், அந்த சுரங்கத்துக்குள் யாரும் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலும் சட்டவிரோதமாக தாமிரத் தாதை சேகரிக்கும் கும்பல் அத்துமீறி நுழைந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டாலும் கூட, காங்கோவின் சிறிய சுரங்கப் பணிகள் மற்றும் ஆதரவு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுரங்கப் பகுதியில் இருந்த பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதனால் பீதியடைந்தவா்கள் அந்தப் பாலத்தில் ஓடியதால் அது இடிந்துவிழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள் மற்றும் பிற முக்கிய சாதனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயான் பேட்டரிகளைத் தயாரிப்பதற்கு உதவும் கோபால்ட், உலகிலேயே காங்கோவில்தான் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.