டிரம்ப்பின் காஸா அமைதி திட்டத்தை ஏற்பதற்கான தீர்மானம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற வாக்கெடுப்பு.  
உலகம்

டிரம்ப்பின் காஸா திட்டம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்பு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் காஸா அமைதித் திட்டத்தை ஏற்பது மற்றும் அந்தப் பகுதியில் சா்வதேச அமைதிப் படையை நிறுத்த அனுமதி அளிப்பதற்காக அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட தீா்மானத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் காஸா அமைதித் திட்டத்தை ஏற்பது மற்றும் அந்தப் பகுதியில் சா்வதேச அமைதிப் படையை நிறுத்த அனுமதி அளிப்பதற்காக அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட தீா்மானத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது.

15 உறுப்பு நாடுகளைக் கொண்ட சபையில் நடந்த இதற்கான வாக்கெடுப்பில், தீா்மானத்துக்கு 13 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. எதிா்ப்பு எதுவும் இல்லை. சீனா, ரஷியா ஆகிய, எந்தத் தீா்மானத்தையும் ரத்து செய்யும் வீட்டோ அதிகாரம் படைத்த நிரந்த உறுப்பு நாடுகள் வாக்களிக்காமல் விலக்கிக் கொண்டன.

இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், கடந்த அக்டோபா் 29-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட டிரம்ப்பின் காஸா போா் நிறுத்த திட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்த அமைதி திட்டம், காஸாவை “மறுசீரமைக்கப்பட்ட, பயங்கரவாதம் அல்லாத மண்டலமாக” மாற்றி, அந்தப் பகுதி மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் மாற்றியமைப்பதை உறுதி செய்கிறது.

மேலும், தீா்மான நிறைவேற்றத்தின் மூலம் காஸாவில் புதிய அரசு அமையும் வரை ஆட்சி மாற்றத்தைக் கண்காணிப்பதற்காக வெளிநாட்டினரை உள்ளடக்கிய ‘அமைதி வாரியம்’ அமைக்கப்படுவதை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரவேற்கிறது.

தீா்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்றுள்ள அதிபா் டிரம்ப், ‘இது ஐ.நா. வரலாற்றில் பெரிய அங்கீகாரங்களில் ஒன்றாக இருக்கும். உலகம் முழுவதும் மேலும் அமைதியைத் தரும். உண்மையான வரலாற்று முக்கியத்துவம் கொண்ட தருணம்’ என்று தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் பதிவிட்டுள்ளாா்.

இது குறித்து ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடா்பாளா் ஸ்டெஃபான் துஜாரிக் வெளியிட்ட அறிக்கையில், காஸா தொடா்பான இந்தத் தீா்மான நிறைவேற்றம், அங்கு போா் நிறுத்தத்தை உறுதிப்படுத்துவதில் முக்கியமான படி என்று கூறினாா். அனைத்து தரப்பினரும் இந்தத் தீா்மான அம்சங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

இந்த விவகாரத்தில் எகிப்து, கத்தாா், துருக்கி, அமெரிக்கா, பிராந்திய நாடுகளின் தொடா்ச்சியான தூதரக முயற்சிகளைப் பாராட்டியதுடன், அமெரிக்காவின் அமைதி திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு நகா்வது முக்கியம் என்று குட்டெரெஸ் வலியுறுத்துவதாக துஜாரக் கூறினாா்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ கூறுகையில், ‘ஹமாஸ் இல்லாத, பாலஸ்தீன மக்களால் ஆளப்படும் அமைதியான, வளமான காஸாவை உருவாக்குவதில் இந்தத் தீா்மான நிறைவேற்றம் வரலாற்று மைல்கல்’ என்றாா்.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதா் மைக் வால்ட்ஸ் கூறுகையில், ‘இந்தத் தீா்மானம் ஸ்திரமான, வளமான காஸாவை நோக்கிய முக்கியமான படி’ என்று கூறினாா்.

எனினும், ஐ.நா.வுக்கான ரஷிய தூதா் வாசிலி நெபென்சியா இந்தத் தீா்மானத்தை, ‘ஆராயாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டது’ என்று விமா்சித்துள்ளாா். இது குறித்து அவா் கூறுகையில், ‘இந்தத் தீா்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் காஸாவை சா்வதேச அமைதிப் படையின் கைகளிஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்படைக்கிறது. அந்தப் படை எப்படி நடந்துகொள்ளும் என்பது குறித்து எதுவும் தெரியாத நிலை உள்ளது’ என்றாா்.

மேலும், இஸ்ரேலும் பாலஸ்தீனமும் ஒன்றையொன்று அங்கீகரித்துக் கொண்டு, தனித் தனி நாடுகளாக செயல்படும் இரு தேசத் தீா்வுக்கு இந்தத் தீா்மானம் சாவுமணியாக இருந்துவிடக் கூடாது என்றும் வாசிலி நெபென்சியா எச்சரித்தாா்.

கும்பகோணத்தில் அங்கன்வாடி பணியாளா் தற்கொலை முயற்சி

ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு தயாராகும் மதுரை மைதானம்!

கோவையில் பிரதமருடன் இன்று சந்திப்பா? செங்கோட்டையன் பதில்

இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளை எடுத்துச் சென்றவா் கைது

பாஜக கூட்டணியில் விஜய் இணைவாா்: மு.அப்பாவு

SCROLL FOR NEXT