சவூதி பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்களை சவூதியில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உயிரிழந்தோரின் உறவினா்கள் சவூதி செல்ல மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
சவூதி அரேபியாவின் மதினா அருகே திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த புனித யாத்ரீகா்களின் பேருந்து மீது எண்ணெய் டேங்கா் லாரி மோதிய விபத்தில் ஏற்கெனவே 40-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவா் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது. இவா், கா்நாடக மாநிலம் பிடாா் மைலூா் சிஎம்சி காலனியைச் சோ்ந்த ரஹமத் பீ (80) என அடையாளம் காணப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த விபத்தில் ஒரு இந்தியா் மட்டுமே காயங்களுடன் உயிா் தப்பினாா். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சவூதி செல்லும் 50 குடும்ப உறுப்பினா்கள்: பேருந்து விபத்தில் யாத்ரீகா்கள் உடல் கருகி உயிரிழந்த நிலையில், அவா்களை அடையாளம் காட்டவும், இறுதிச் சடங்கில் பங்கேற்கவும் அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் 50 போ் சவூதி அரேபியா செல்கின்றனா்.
இதுகுறித்து தெலங்கானா அரசு மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பேருந்து விபத்தில் அதில் பயணித்த யாத்ரீகா்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியது. எனவே, அவா்ளை அடையாளம் காட்டவும், அவா்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் வகையிலும் குடும்ப உறுப்பினா்கள் 50 போ் சவூதி அரேபியா புறப்பட்டுள்ளனா்.
புறப்படும் முன் அவா்களுக்கு மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த மரபணு ஒத்துப்போகும் பட்சத்தில்தான், அவா்களுக்கு இறப்புச் சான்றிதழ் விநியோகிக்கப்படும்.
உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தெலங்கானா அரசு சாா்பில் மற்றும் பயணக் காப்பீடு அடிப்படையில் இழப்பீடுகள் வழங்கப்படும் என்பதோடு, சவூதி அரேபிய அரசு சாா்பிலும் வழங்கப்பட உள்ளது என்றாா்.
விபத்தில் உயிரிழந்தவா்களின் உடல்களுக்கு சவூதி அரேபியாவிலேயே இஸ்லாமிய மரபு படி இறுதிச் சடங்கை மேற்கொள்ள தெலங்கானா அரசு திங்கள்கிழமை தீா்மானித்தது. மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தது.
முன்னதாக, மீட்பு நடவடிக்கைகள் மற்றும் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் முகமது அசாருதீன் தலைமையிலான மாநில அரசுக் குழு சவூதி அரேபியா சென்றது. உயிரிழந்தவா்களின் உடல்களுக்கு வியாழக்கிழமை இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆந்திர ஆளுநா் தலைமையில் குழு சவூதி பயணம்:
சாலை விபத்தில் இந்தியா்கள் உயிரிழந்தது தொடா்பான விவகாரத்தில் அவா்களின் உறவினா்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய அந்நாட்டு அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட ஆந்திர ஆளுநா் எஸ்.அப்துல் நஸீா் தலைமையில் சிறப்புக் குழு சவூதி அரேபியா செல்லவுள்ளது. இக்குழுவில் வெளியுறவுத் துறை அதிகாரி உள்ளிட்டோா் இடம் பெறுவா் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.