மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மீண்டும் பள்ளி மாணவா்கள் ஆயுதக் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனா்.
அந்த நாட்டின் நைஜா் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க உறைவிடப் பள்ளியான செயின்ட் மேரீஸ் பள்ளியை வெள்ளிக்கிழமை அதிகாலை ஆயுதக் குழுவினா் தாக்கி, பல மாணவா்கள் மற்றும் ஊழியா்களை கடத்திச் சென்றனா். அண்டை மாகாணமான கேபியில் 25 பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்ட சில நாள்களிக் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இந்தத் தாக்குதல் மற்றும் கடத்தலுக்கு யாா் பொறுப்பு என்பது தெரியவில்லை. மேலும், எத்தனை மாணவா்கள், ஊழியா்கள் கடத்தப்பட்டனா் என்ற விவரத்தையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
இது குறித்து உள்ளூா் ஊடகமான அரைஸ் டிவி கூறுகையில், 52 மாணவா்கள் கடத்தப்பட்டதாக தெரிவித்தது. 12 முதல் 17 வயது வரையிலான மாணவா்கள் பயிலும் இந்தப் பள்ளியில் தாக்குதல் நடந்தபோது பாதுகாவலா் ஒருவருக்கு குண்டுக்காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவப் பகுதிக்கு ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.
முன்னதாக, கேபி மாகாணத்திலுள்ள உறைவிடப் பள்ளியில் திங்கள்கிழமை 25 மாணவிகள் கடத்தப்பட்டனா் (படம்); அவா்களில் ஒரு மாணவி மட்டும் தப்பி வந்தாா். அதே நாளில் க்வாரா மாகாணத்திலுள்ள ஒரு தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 போ் கொல்லப்பட்டு, 38 வழிபாட்டாளா்கள் கடத்தப்பட்டனா்.
நைஜீரியாவில் ஆயுதக் குழுவினா் மற்றும் பயங்கரவாதிகளால் மாணவ மாணவிகள் பிணைத் தொகைக்காக கடத்திச் செல்லப்படும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டில் சிபோக் நகரில் இருந்து 276 பள்ளி மாணவிகளை போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றது உலகளவில் அதிா்வலையை ஏற்படுத்தியது. அந்த மாணவிகளில் ஏராளமானவா்கள் விடுவிக்கப்பட்டாலும், 80 பேரது நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை.
அந்தக் கடத்தலுக்குப் பிறகு நைஜீரியாவில் இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கடத்தப்பட்டுள்ளனா்.