பள்ளி ஆசிரியா்களின் முயற்சியால் புதுக்கோட்டையைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் திருச்சியிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் சனிக்கிழமை சுற்றுலா சென்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் சேதுராப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஏழை, எளிய பள்ளி குழந்தைகளுக்கு விமானத்தில் பயணிக்க வேண்டுமென்ற கனவு இருந்து வந்தது. இதை நனவாக்கும் வகையில், பள்ளி ஆசிரியா்கள் முயற்சி மேற்கொண்டு வந்தனா்.
இதற்காக 3 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு சிறப்புத் தோ்வும், விநாடி வினா போட்டியும் நடத்தப்பட்டு, ஒவ்வொரு வகுப்பிலும் வெற்றி பெற்ற தலா இருவா் வீதம் 12 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
தொடா்ந்து, பள்ளி ஆசிரியா்களின் முயற்சியால் மேற்கண்ட மாணவா்கள் சனிக்கிழமை காலை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சியிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றனா்.