அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில், டொனால்ட் டிரம்ப் ஒரு ஃபாசிஸ்டா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவரது முன்னிலையில் நியூயார்க் மேயர் ஸோரான் மம்தானி ‘ஆம்’ எனப் பதிலளித்துள்ளார்.
நியூயார்க் நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி, நேற்று (நவ. 21) வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை முதல்முறையாக நேரில் சந்தித்து உரையாடினார்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையின் அதிபர் அலுவலகத்தில் (ஓவல் ஆஃபீஸ்) நடைபெற்ற இந்தச் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் மம்தானியிடம் கேட்ட கேள்விக்கு குறுக்கிட்ட அதிபர் டிரம்ப் அவர் பதிலளிக்க உதவினார்.
செய்தியாளர் : ”நீங்கள் அதிபர் டிரம்ப் ஒரு ஃபாசிஸ்ட் என உறுதியாக நம்புகிறீர்களா?”
இந்தக் கேள்விக்கு, மம்தானி பதிலளிக்கத் துவங்கியவுடன் குறுக்கிட்ட டிரம்ப்,
அதிபர் டிரம்ப்: “ஆம்! என்று பதிலளியுங்கள், இந்தக் கேள்விக்கு விளக்கமளிப்பதை விட ஆம் என்று கூறுவது எளிது. நான் கண்டுகொள்ள மாட்டேன்!” என்றார்.
இதையடுத்து, மம்தானியும் ஆம்! எனப் பதிலளித்தார்.
முதல்முறையாக, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பானது அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிரானவர்களுடன் நடைபெறும் சந்திப்பை போலவே குற்றச்சாட்டுகள் நிறைந்ததாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், செய்தியாளர்களிடம் ஒருவரையொருவர் மரியாதையுடன் குறிப்பிட்டு பதிலளித்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்தச் சந்திப்பு குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது:
”நான் மிகவும் பகுத்தறிவுள்ள ஒருவரை (மம்தானி) சந்தித்துள்ளேன். அவர் நியூயார்க் நகரை மீண்டும் சிறந்த நகரமாக உருவாக்க நினைக்கிறார். நான் மீண்டும் எனக் கூறுவது ஏன் என்றால் நியூயார்க் முன்பு சிறந்த நகரமாக இருந்தது”
முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் டொனால்ட் டிரம்ப் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து தனது பிரசாரங்களில் ஸோரான் மம்தானி பேசி வந்தார்.
இதனால், மம்தானி ஒரு கம்யூனிஸ்ட் மற்றும் ஹமாஸ் ஆதரவாளர் என்று குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், நியூயார்க் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியா - பாக். போரை நிறுத்தினேன்: மம்தானி உடனான சந்திப்பில் டிரம்ப் பேச்சு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.