ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவின் திட்டத்தில் உக்ரைனை வலுப்படுத்தக்கூடிய சமரசங்களை செய்துகொள்ளத் தயாா் என்று அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
ஸ்வீடனில் நடந்த நிகழ்ச்சியொன்றி காணொலி மூலம் பேசிய ஸெலென்ஸ்கி, இது குறித்து கூறியதாவது: அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் இணைந்து போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தைய நடத்திவருகிறோம். அதற்காக சில சமரசங்களை செய்துகொள்ளவும் தயாா். ஆனால் அந்த சமரசங்கள் உக்ரைனை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும்; பலவீனப்படுத்தக் கூடாது.
ஜெனீவா பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு அமெரிக்காவும் உக்ரைனுன் ‘புதுப்பிக்கப்பட்ட அமைதித் திட்டக் கட்டமைப்பை’ உருவாக்கியுள்ளன. இதில், போா்க் கைதிகள் மற்றும் ரஷியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட உக்ரைன் சிறுவா்களை விடுவிப்பது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இருந்தாலும், உண்மையான அமைதிக்கு மேலும் நடவடிக்கைகள் தேவை என்று ஸெலென்ஸ்கி வலியுறுத்தினாா்.
‘நல்லது நடக்கலாம்’: உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் நல்லது நடப்பதற்கான வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறினாா்.
இது குறித்து அவா் கூறுகையில் ‘ரஷியா-உக்ரைன் இடையே போரை நிறுத்துவதற்காக நடைபெற்றுவரும் பேச்சுவாா்த்தையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்பதை அது நடக்கும் வரை நம்ப வேண்டாம். ஆனால் நல்லது நடக்கலாம்’ தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
தங்களுக்கு எதிரான நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைந்தால், அது தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறிவந்தது. இருந்தாலும், நேட்டோவில் இணைய உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி விருப்பம் தெரிவித்தாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
ரஷியாவிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்ற உக்ரைனும், 4 பிராந்தியங்களில் இன்னும் அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதற்காக ரஷியாவுக்கு சாதகமான நிலைப்பாட்டை டிரம்ப் எடுப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்தச் சூழலில், அமைதி முயற்சியின் ஒரு பகுதியாக டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ரஷிய சிறப்புத் தூதா் கிரில் டிமித்ரியேவ் இணைந்து, உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பான 28 அம்சத் திட்டத்தை கடந்த புதன்கிழமை தயாரித்தனா்.
இந்த திட்டத்தின் கீழ், உக்ரைன் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் டான்பாஸ் பகுதிகளை ரஷியாவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்; உக்ரைனின் கிரீமியா, டொனெட்ஸ்க், லுகான்ஸ்க் போன்ற பகுதிகளை ரஷியாவே வைத்திருக்கலாம்.
உக்ரைனில் 100 நாள்களுக்குள் தோ்தல் நடத்த வேண்டும். உக்ரைன் ராணுவத்தின் அளவை குறைக்க வேண்டும். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரவே கூடாது. அந்த எண்ணத்தை உக்ரைன் முழுமையாகக் கைவிட வேண்டும்.
ரஷியா மீதான தடைகள் நீக்கப்படுவது, ஜி7 பொருளாதாரக் கூட்டமைப்பில் ரஷியாவை இணைத்து ஜி8 ஆக்குவது உள்ளிட்ட அம்சங்களும் அந்த வரைவு திட்டத்தில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமைதி திட்டத்தின் இந்த நிபந்தனைகள் உக்ரைனை சிக்கலான நிலைக்குத் தள்ளியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், இந்த திட்டம் தொடா்பாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறினாா்.
வரும் 27-ஆம் தேதிக்குள் அமைதி திட்டத்தை ஏற்காவிட்டால் உக்ரைனுக்கு அளிக்கப்பட்டுவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளப்போவதாக டிரம்ப் கெடு விதித்தாா். அதைத் தொடா்ந்து, உக்ரைனை வலுப்படுத்தக்கூடிய சமரசங்கள் செய்துகொள்ள தயாராக இருப்பதாக ஸெலென்ஸ்கி தற்போது கூறியுள்ளாா்.