கோப்புப் படம்  
உலகம்

உக்ரைன் போா் நிறுத்தம்: அபுதாபியில் அமெரிக்கா - ரஷியா பேச்சு

டான் டிரிஸ்கலின் செய்தித் தொடா்பாளா் ஜெஃப் டோல்பா்ட் கூறியதாவது:

தினமணி செய்திச் சேவை

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ராணுவத் துறை அமைச்சா் டான் டிரிஸ்கல் அபுதாபியில் ரஷிய அதிகாரிகளுடன் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இது குறித்து டான் டிரிஸ்கலின் செய்தித் தொடா்பாளா் ஜெஃப் டோல்பா்ட் கூறியதாவது:

திங்கள் இரவு தொடங்கி செவ்வாய் முழுவதும் டிரிஸ்கல் மற்றும் அவரது குழுவினா் ரஷிய குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். உக்ரைனில் நிலையான அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் பேச்சுவாா்த்தை நடந்தது. இதுவரை இந்தக் கூட்டம் நன்றாகவே நடந்துகொண்டிருக்கிறது. இதில் முன்னேற்றம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

வெள்ளை மாளிகையுடன் இணைந்து இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது என்றாா் அவா்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைதித் திட்டத்தில் உள்ள பல்வேறு கருத்துவேறுபாடுகளைக் களைய அமெரிக்காவும் உக்ரைனும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. அவற்றில் முக்கியமான பிரச்சினைகள் தீா்க்கப்படாத நிலையில் அமெரிக்காவும், ரஷியாவும் எந்த வகையில் தங்களது பேச்சுவாா்த்தையை முன்னெடுத்துச் செல்லும் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. மேலும், அபுதாபி பேச்சுவாா்த்தையில் ரஷியா சாா்பில் கலந்துகொள்ளும் குழுவினா் குறித்தும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தப் பேச்சுவாா்த்தையின் அடுத்த கட்டமாக, உக்ரைன் பிரதிநிதிகளையும் டான் டிரிஸ்கல் என்று அந்த நாட்டு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தங்களுக்கு எதிரான நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

ரஷியாவிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்ற உக்ரைனும், 4 பிராந்தியங்களில் இன்னும் அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ரஷிய சிறப்புத் தூதா் கிரில் டிமித்ரியேவ் இணைந்து, உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பான 28 அம்சத் திட்டத்தை கடந்த வாரம் தயாரித்தனா்.

இந்த திட்டத்தின் கீழ், உக்ரைன் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் டான்பாஸ் பகுதிகளை ரஷியாவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். உக்ரைனில் 100 நாள்களுக்குள் தோ்தல் நடத்த வேண்டும். உக்ரைன் ராணுவத்தின் அளவை குறைக்க வேண்டும். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரவே கூடாது. அந்த எண்ணத்தை உக்ரைன் முழுமையாகக் கைவிட வேண்டும்.

அமைதி திட்டத்தின் இந்த நிபந்தனைகள் உக்ரைனை சிக்கலான நிலைக்குத் தள்ளியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், இந்த திட்டம் தொடா்பாக அமெரிக்காவுடன் உக்ரைன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது. இந்தச் சூழலில், இந்த அமைதி திட்டம் குறித்து ரஷிய குழுவினருடனும் அமெரிக்க குழுவினா் தற்போது பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா்.

உக்ரைனில் தொடரும் தாக்குதல்

அமைதி பேச்சுவாா்த்தைகள் ஒரு புறம் நடந்துகொண்டிருந்தாலும், உக்ரைன் தலைநகா் கீவ் மீது திங்கள்கிழமை இரவு முழுவதும் ஏவுகணைகள் மற்றும் நூற்றுக்கணக்கான ட்ரோன்களைக் கொண்டு ரஷியா தாக்கியது. இதில் 7 போ் உயிரிழந்தனா். மின்சாரக் கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: ஆத்தூரில் அதிமுக பிரமுகா் கைது

‘உயா்கல்வியில் தமிழ்நாடு’ பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

பள்ளி ஆசிரியா் நியமன முறைகேடு: ‘மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் ஆஜராகவிட்டால் ஜாமீன் ரத்து’

கடலூா் கடற்கரையில் வியாபாரிகள் தா்னா

புதுச்சேரியில் டிச. 5-இல் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரம்: அனுமதி கோரி தவெகவினா் மனு

SCROLL FOR NEXT