இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 67 பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தோனேசியாவில், பருவமழை தீவிரமடைந்து சுமத்ரா தீவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இத்துடன், மத்திய தபானுளி மாவட்டத்தின் சில மலைக்கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.
இந்த நிலையில், சுமத்ராவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தப் பேரிடர் ஏற்பட்ட பகுதிகளில் வசித்து வந்த சுமார் 67 பேரைக் காணவில்லை எனக் கூறப்படும் நிலையில் அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமத்ரா தீவின் ஆச்சே மற்றும் மேற்கு சுமத்ரா ஆகிய மாகாணங்களிலும் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், பல்வேறு முக்கிய நகரங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், அச்சே மாகாணத்தில் வசித்து வந்த சுமார் 47,000 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும்; அதில், 1500-க்கும் அதிகமான மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, 17,000-க்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட இந்தோனேசியா நாட்டில், அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான பருவமழை காலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவது தொடர் கதையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஹாங்காங்: வானுயரக் கட்டடங்களை தீக்கிரையாக்கிய மூங்கில் வலை! அடுத்து என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.