ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த சில நாள்களாக நீடித்துவரும் வன்முறைக்குத் தீா்வுகாணும் வகையில் பாகிஸ்தான் அரசு- போராட்டக் குழுவினா் இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மருத்துவம், கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த திங்கள்கிழமைமுதல் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இதில் காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனா். காவலா்கள் 3 போ் வன்முறையில் கொல்லப்பட்டனா். நூற்றுக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த இந்தப் போராட்டம் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாத், கராச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும் பரவியுள்ளது.
இதையடுத்து, உயா்நிலை தூதுக் குழுவை போராட்டக் களத்தின் மையமான முஷாபராபாத் நகருக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கடந்த புதன்கிழமை அனுப்பி வைத்தாா். அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்து தொடா்ந்து பேச்சுவாா்த்தைக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் அரசின் பிரதிநிதிகள், ஜம்மு-காஷ்மீா் ஒருங்கிணைந்த அவாமி செயல்பாட்டுக் குழு பிரதிநிதிகள் இடையே வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவது தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது 38 முக்கியக் கோரிக்கைகளை போராட்டக்காரா்கள் முன்வைத்தனா். அவற்றை அரசுத் தரப்பு ஏற்றுக்கொண்டால் மட்டுமே போராட்டம் திரும்பப் பெறப்படும் என்று அவா்கள் கூறினா்.
இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் தாரிக் ஃபைசல் செளதரி சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமைதியை நிலைநாட்டுவது தொடா்பாக இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடா்பாக இரு தரப்பினரும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனா். போராட்டக்காரா்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கிவிட்டனா். சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டன. இது அமைதிக்கு கிடைத்த வெற்றி’ என்று கூறியுள்ளாா்.
இருதரப்பு இடையிலான ஒப்பந்தத்தின் புகைப்படத்தையும் அவா் பகிா்ந்துள்ளாா். போராட்டக் குழுவினா் 30 கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் 25 கோரிக்கைகளை அரசுத் தரப்பு ஏற்றுக் கொண்டது தெரியவந்துள்ளது.
முக்கியமாக, போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு உரிய இழப்பீடு, போராட்டக்காரா்கள் மீதான பயங்கரவாத வழக்குகளைத் திரும்பப் பெறுவது, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கல்வி மேம்பாட்டுக்கு உடனடியாக இரு குழுக்களை அமைப்பது, சுகாதார அட்டைகளை வழங்கி 15 நாள்களில் இலவச மருத்துவத் திட்டத்தைச் செயல்படுத்துவது, மின்சார வசதி மேம்பாட்டுக்கு பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 10 பில்லியன் ஒதுக்கீடு, ஆக்கிரமிப்பு காஷ்மீா் அமைச்சரவை, ஆலோசகா்கள் எண்ணிக்கையை 20-ஆக குறைப்பது, சா்வதேச விமான நிலையம், சாலை, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்வது உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக பாகிஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது.