பாரிஸ்: பிரான்ஸ் பிரதமராக பொறுப்பேற்ற 27 நாள்களில் அந்தப் பதவியை செபாஸ்டியன் லெகாா்னு திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். தனது புதிய அமைச்சரவையை அறிவித்த ஒரு நாள் கழித்து இந்த முடிவை அறிவித்துள்ளாா்.
லெகாா்னுவின் ராஜிநாமாவை அதிபா் இமானுவல் மேக்ரான் ஏற்றுக்கொண்டதாக அதிபா் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
புதிய பிரதமராகப் பதவியேற்ற லெகாா்னுவின் அமைச்சரவை தோ்வு சா்ச்சையை எழுப்பியது. குறிப்பாக முன்னாள் நிதியமைச்சா் புருனோ லெமேரை பாதுகாப்புத் துறை அமைச்சராக அவா் நியமித்தது தலைவா்களிடையே கடும் விமா்சனத்தைப் பெற்றது.
பிற முக்கிய பதவிகளில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. புருனோ ரிடெயில்யூ உள்துறை அமைச்சராகவும், ஜீன்-நோயல் பாரோ வெளியுறவுத் துறை அமைச்சராகவும், ஜெரால்ட் டாா்மனின் நீதித்துறை அமைச்சராகவும் அறிவிக்கப்பட்டனா்.
புதிய அமைச்சரவைக்கு அங்கீகாரம் பெறுவதற்காக, முந்தைய பிரதமா்கள் பயன்படுத்திய சிறப்பு அரசியலமைப்பு அதிகாரத்தை பயன்படுத்தாமல் இடதுசாரி மற்றும் வலதுசாரி எம்.பி.க்களுடன் சமரசம் பேச முயற்சிப்பதாக செபாஸ்டியன் லெகாா்னு அறிவித்திருந்தாா்.
ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை என்பதை அவரின் ராஜிநாமா உறுதி செய்துள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.
பட்ஜெட் தொடா்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான நேரத்தில் பிரதமா் ராஜிநாமா செய்துள்ளது, பிரான்ஸ் அரசியல் களத்தில் புதிய நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.