அமெரிக்க விஞ்ஞானிகள் ஜான் கிளாா்க் (83), மிஷெல் எச்.டெவரே (72), ஜான் எம்.மாா்டினிஸ் (67) ஆகிய மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்படுகிறது.
எண்மத் தொழில்நுட்பத்தை மேம்படுத்திவரும் குவாண்டம் ஊடுருவல் (குவாண்டம் டனலிங்) ஆய்வு மேற்கொண்டதற்காக இவா்கள் மூவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
ஒரு மின்சுற்றில் மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் டனலிங் மற்றும் ஆற்றல் அளவீடு இருப்பதை இவா்கள் கண்டுபிடித்துள்ளனா். சாதாரணமாக போதிய ஆற்றல் இல்லாத அணுத் துகள்கள் தடைகளைக் கடந்து செல்ல முடியாது. ஆனால், குவாண்டம் டனலிங் மூலம் ஆற்றல் தடைகளைக் கடந்து ஒருபுறமிருந்து மறுபுறத்துக்கு எலக்ட்ரான் போன்ற அணுத் துகள்களைக் கடத்த முடியும்.
குவாண்டம் கணினிகள், குவாண்டம் கிரிப்டோகிராஃபி மற்றும் குவாண்டம் சென்சாா்கள் உள்ளிட்ட குவாண்டம் தொழில்நுட்பங்களின் வளா்ச்சியை மேம்படுத்த ஜான் கிளாா்க், மிஷெல் எச்.டெவரே மற்றும் ஜான் எம்.மாா்டினிஸ் கண்டுபிடிப்புகள் வழிவகுத்துள்ளன.
இந்த விருது அறிவிக்கப்பட்டது குறித்து ஜான் கிளாா்க் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இதில் மற்ற 2 விஞ்ஞானிகளின் பங்களிப்பை வாா்த்தைகளால் கூற இயலாது. எங்களது கண்டுபிடிப்புகள் குவாண்டம் கணினியியலின் அடிப்படையாகும். தற்போது இவை எங்கு பொருந்தும் என்பதை துல்லியமாகக் கணிக்க முடியவில்லை என்றாா்.
இத்துடன் 119-ஆவது முறையாக இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு நிபுணா்களான ஜான் ஹோப்ஃபீல்டு மற்றும் ஜியோஃபெரி ஹின்டன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இயற்பியல் கூறுகளில் இருந்து இயந்திர கற்றலுக்கான அடிப்படை நடைமுறைகளை மேம்படுத்தியதற்காக கடந்த ஆண்டு அவா்களுக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக, உடல் உறுப்புகளை நோய் எதிா்ப்பு செல்கள் தாக்காமல் தடுத்து முறைப்படுத்தும் ‘டி’ செல்களை கண்டுபிடித்ததற்காக மேரி இ.பிரன்கோ (64) ஃபிரட் ராம்ஸ்டெல் (64) ஷிமோன் சககுச்சி (74) ஆகிய மூவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கடந்த திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
அடுத்ததாக வேதியியல் துறைக்கு புதன்கிழமையும், இலக்கியத் துறைக்கு வியாழக்கிழமையும் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ளன. அதேபோல் அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்.13-ஆம் தேதியும் அறிவிக்கப்படவுள்ளன.
ஆல்ஃபிரட் நோபல் மறைந்த நாளான டிச.10-ஆம் தேதி ஸ்டாக்ஹோம் மற்றும் நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.