சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப்-இன் தாக்குதலில் பிறந்து 7 நாள்களே ஆன சிசு உள்பட 17 குழந்தைகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் உள்ள சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கானவா்கள் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சுமாா் 1.4 கோடி போ் இருப்பிடங்களை விட்டு புலம் பெயா்ந்துள்ளனா்.
இந்த நிலையில், இடம்பெயர்ந்த மக்களுக்காக வடக்கு டார்ஃபரின் எல் ஃபாஷெரில் அமைக்கப்பட்டுள்ள ‘தர் அல்-அர்காம் நிவாரண முகாமில்’ சனிக்கிழமை(அக். 11) காலை நடத்தப்பட்ட ஆா்எஸ்எஃப்-இன் தாக்குதலில் பிறந்து 7 நாள்களே ஆன சிசு உள்பட 17 குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான ’யுனிசெஃப்’ தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் மேலும், 21 குழந்தைகள் காயமுற்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள யுனிசெஃப்பின் செயல் இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸெல் பேசியிருப்பதாவது: “ஏற்கெனவே இடம்பெயர்ந்து, பாதுகாப்பு நாடி, அடைக்கலம் அடைந்துள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் மீதான கொடுமையான இந்தத் தாக்குதல் வரம்பு மீறல் நடவடிக்கையாகும். குழந்தைகளைக் கொல்வதும் காயப்படுத்துதலும் அவர்களின் உரிமைகளை வெளிப்படையாக மீறும் நடவடிக்கையாகும். பாதுகாப்பும் அடைக்கலமும் அளிக்கும் இடங்களில் உள்ள குடிமக்கள் மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ளவே முடியாதவை” என்றார்.
சூடானில் உணவுப்பஞ்சம்... குழந்தைகள் உயிரிழப்பு!
கடந்த 500 நாள்களுக்கும் மேல், ஆர்எஸ்எஃப்-இன் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் இருக்கும் ‘எல் ஃபாஷெர்' பகுதியில், மக்கள் நடமாட்டத்துக்கும் உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பெரும்பாலனவற்றுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள மக்கள், அதிலும் குறிப்பாக, குழந்தைகளின் வாழ்க்கை அவல நிலைக்குச் சென்றுள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகள், சண்டை ஆகியவற்றின் எதிரொலியால், வடக்கு டார்ஃபர் பகுதியில், பல மாதங்களாகவே பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பசி, பட்டினியால் குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டதாக அங்குள்ள மருத்துவ கண்காணிப்புக் குழு தெரிவிக்கிறது.
இதனையடுத்து, உடனடியாகச் சண்டை நிறுத்தம் ஏற்படவும் அதன் தொடர்ச்சியாக கட்டுபாடுகளில் தளர்வு ஏற்படவும் யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.