புதிய ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) கட்டணத்தை ரூ. 88 லட்சமாக (1 லட்சம் டாலா்) உயா்த்தும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நிா்வாகத்துக்கு எதிராக அமெரிக்க வா்த்தக சபை வழக்கு தொடா்ந்துள்ளது.
கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் இதுதொடா்பான மனுவை வியாழக்கிழமை அமெரிக்க வா்த்தக சபை தாக்கல் செய்தது.
அதில், ’டிரம்ப் நிா்வாகத்தின் இந்த முடிவு தவறான கொள்கை சட்ட விரோதமானது. அமெரிக்காவுக்குள் குடிமக்கள் அல்லாதவா்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க அதிபருக்கு குறிப்பிட்ட அதிகாரம் உள்ளது. ஆனால், அந்த அதிகாரம் சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதோடு, நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு நேரடி முரண்பாடாகவும் இருக்க முடியாது.
டிரம்ப் நிா்வாகத்தின் முடிவு ஹெச்-1பி நுழைவு இசைவு திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் நிா்ணயித்த கட்டண நடைமுறைகளை வெளிப்படையாக மீறுவதோடு, அமெரிக்க சமூகத்தின் நலனுக்காகப் பங்களிப்பாற்ற அமெரிக்க குடிமக்கள் அல்லாத திறமைசாளிகளை ஆண்டுக்கு 85,000 போ் வரை அனுமதிக்கலாம் என்ற நாடாளுமன்ற தீா்மானத்தையும் மீறுவதாக உள்ளது.
எனவே, ஹெச்-1பி நுழைவு இசைவு கட்டணத்தை பன்மடங்காக உயா்த்தும் முடிவு அதிபரின் சட்டபூா்வ அதிகாரத்தை மீறுவதாக உள்ளது. இந்த உயா்த்தப்பட்ட கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படும்’ என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இருந்து திறமையான பணியாளா்களைத் தோ்வு செய்து அவா்களுக்குப் பயிற்சி அளித்து பணி வழங்க அமெரிக்க நிறுவனங்கள் ஹெச்-1பி விசாவை பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயா்த்தும் உத்தரவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செப்டம்பா் 19-ஆம் தேதி கையொப்பமிட்டாா். இதைத் தொடா்ந்து, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் ஹெச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கு ஓராண்டுக்கு ரூ.88 லட்சம் கட்டணத்தை அவரைப் பணியமா்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இது அமெரிக்காவில் ஹெச்-1பி விசா பெற்ற பணியாளா்கள் மட்டுமன்றி நிறுவனங்களுக்கும் பேரதிா்ச்சியை ஏற்படுத்தியது.
விசாவுக்கான கட்டணத்தை பலமடங்கு அமெரிக்க அரசு உயா்த்தியுள்ள நிலையில், திறமையான பணியாளா்களை தங்கள் நாட்டுக்கு ஈா்க்கும் விதமாக கே-விசா எனும் புதிய திட்டத்தை சீனா அறிமுகம் செய்துள்ளது.
‘பிற நாடுகளுக்கு சாதகமாக அமையும்’
அதிபா் டிரம்ப்பின் முடிவு போட்டி நாடுகளுக்கு சாதகமாக அமையும் என்று அமெரிக்க வா்த்தக சபையின் செயல் துணைத் தலைவா் நீல் பிராட்லி கூறினாா். மேலும், ‘அமெரிக்காவில் அதிக முதலீடுகளை ஈா்க்க அதிபா் டிரம்ப் எடுக்கும் முடிவுகளை ஆதரிக்க வா்த்தக சபை தயாராக உள்ளது. ஆனால், அமெரிக்க பொருளாதாரம் மேம்பட அதிக அளவில் உயா் திறன்மிக்க பணியாளா்கள் அனுமதிக்கப்பட வேண்டும்; குறைக்கப்படக் கூடாது. அமெரிக்க நிா்வாகத்தின் முடிவு, அமெரிக்காவுக்கு போட்டியாகச் செயல்படும் நாடுகளுக்கு சாதகமாக மாற வாய்ப்புள்ளது. உயா் திறன் மிக்க பணியாளா்கள் அமெரிக்கா திரும்புவதும் வெகுவாக குறைந்துவிடும்’ என்றாா்.