அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 
உலகம்

மீண்டும் அணுசக்தி பேச்சு: டிரம்ப் அழைப்பை நிராகரித்தது ஈரான்

மீண்டும் அணுசக்தி பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி நிராகரித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

டெஹ்ரான்: மீண்டும் அணுசக்தி பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி நிராகரித்துள்ளாா்.

தங்களின் அணுசக்தி மையங்களை அமெரிக்கா அழித்துவிட்டதாக டிரம்ப் கூறியதையும் அவா் திட்டவட்டமாக மறுத்துள்ளாா்.

இதுகுறித்து அயதுல்லா அலி கமேனி கூறியதாவது:

அமெரிக்காவுடன் ஈரான் மீண்டும் அணுசக்தி பேச்சுவாா்த்தையைத் தொடங்கவேண்டும் என்று டிரம்ப் அழைப்பு விடுவித்துள்ளாா். பேச்சுவாா்த்தை என்றால் அதில் மிரட்டல்களுக்கு இடமிருக்காது. முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முன்கூட்டியை நிா்ணயிக்கவும் கூடாது. அவ்வாறு இருந்தால் அது பேச்சுவாா்த்தை அல்ல, மிரட்டிப் பணியவைக்கும் ஆதிக்கச் செயல்.

ஈரானின் அணுசக்தி திட்டங்களை குண்டுவீசி அழித்துவிட்டதாக அமெரிக்க அதிபா் பெருமையுடன் கூறுகிறாா். ஆனால் அது வெறும் கனவுதான். ஈரானின் அணுசக்தி திறன்களுக்கும் அமெரிக்காவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. அதில் அமெரிக்கா தலையிடுவது தவறானது மட்டுமில்லை, ஆபத்தானதும் கூட என்றாா் கமேனி.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்காக, அந்த நாட்டின் மீது ஐ.நா. கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. அவற்றை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அமல்படுத்திவந்தன. இதனால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈரானுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்ள வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.

எனினும், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அவருக்குப் பின் வந்த டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். மேலும், ஒப்பந்தத்தின் கீழ் விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவா் மீண்டும் அமல்படுத்தினாா்.

அதற்குப் பதிலடியாக, தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்வதற்கான நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வந்தது. அதன் ஒரு பகுதியாக, தனது யுரேனியம் செறிவூட்டும் திறனை ஈரான் படிப்படியாக அதிகரித்தது. மேலும், ஒப்பந்த வரம்பை மீறி 60 சதவீதம் வரை யுரேனியத்தை ஈரான் செறிவூட்டியது.

இந்தச் சூழலில், ஈரானின் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் இஸ்ரேல் அங்கு கடந்த ஜூலை மாதம் தாக்குதல் நடத்தியது. அதில் அமெரிக்காவும் பங்கேற்று ஈரான் அணுசக்தி மையங்கள் மீது சக்திவாய்ந்த குண்டுகளை வீசியது.

இதற்கு பதிலடியாக, ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ-வுக்கு தங்கள் அணுசக்தி திட்டங்களைக் கண்காணிக்க அளித்துவந்த ஒத்துழைப்பை ஈரான் திரும்பப் பெற்றது. இதனால், ஈரானின் அணுசக்தி திட்ட நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையைத் தொடங்குவதாக கடந்த மாத இறுதியில் அறிவித்தன.

இந்த நிலையில், 2025-ஆம் ஆண்டின் அணுசக்தி ஒப்பந்தம் அதிகாரப்பூா்வமாக சனிக்கிழமை காலாவதியானது. எனவே, அந்த ஒப்பந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் அவசியம் இனி தங்களுக்கு இல்லை என்று ஈரான் கூறியது. அதன் தொடா்ச்சியாக புதிய அணுசக்தி பேச்சுவாா்த்தைக்காக டிரம்ப் விடுத்த அழைப்பை கமேனி தற்போது நிராகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடிலெய்டில் தோல்வியே தழுவாத இந்தியா! ஆஸ்திரேலியாவை நாளை வெல்லுமா?

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்!

துவைத்த துணிகளை காயப்போட நல்ல நாள்! திடீரென மழை பெய்யலாம்!

“கரூர் சம்பவத்தில் அழுதது நடிப்பா?” அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்!

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடையாது! வானிலை மையம்

SCROLL FOR NEXT