போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டால் ஹமாஸை அழித்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயிலான போர் நிறுத்தம் கடந்த வாரம் அமலுக்கு வந்தது. எகிப்தில் அதிபர் டிரம்ப் தலைமையில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் இரு தரப்பினரும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
இந்த நிலையில், காஸாவில் போர் ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டை எழுப்பிய இஸ்ரேல் ராணுவத்தினர், பதில் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக, ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு திங்கள்கிழமை பதிலளித்த டிரம்ப் பேசியதாவது:
”மத்திய கிழக்கில் முதல்முறையாக அமைதியை கொண்டு வருவதற்காக ஹமாஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர்கள் சரியாக நடந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம். இல்லையென்றால், அவர்களை நாங்கள் ஒழித்துவிடுவோம். அவர்களுக்கும் அது தெரியும்.
இஸ்ரேலுக்குள் சென்ற ஹமாஸ் அமைப்பினர் மக்களை கொன்றுள்ளனர். அவர்கள் மிகவும் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு இனி ஈரான் மட்டுமின்றி யாருடைய ஆதரவும் கிடைக்காது. அவர்கள் நல்லவர்களாக மாறாவிட்டால் அழிக்கப்படுவார்கள்.
அவர்கள் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் நாங்கள் உள்ளே சென்று சரிசெய்ய வேண்டியிருக்கும். அது மிக விரைவாகவும், மிக வன்முறையான முறையிலும் நடக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் விளக்கம்
ஹமாஸ் படையினரின் புதிய தாக்குதல்களில் இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கான பதிலடியாக ஞாயிற்றுக்கிழமை(அக். 19) இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காஸாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பத்திரிகையாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் என்று பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.