அதானி குழுமத்துக்கு ஆதரவாக அரசுக்குச் சொந்தமான எல்ஐசி நிறுவனம் முதலீடு செய்வதாக அமெரிக்காவின் தி வாஷிங்டன் போஸ்ட் இதழில் வெளியான கட்டுரைக்கு அந்த நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எல்ஐசி-யின் முதலீட்டு முடிவுகள் வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படுகின்றன என்று வாஷிங்டன் போஸ்ட் சுமத்தும் குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை, உண்மைக்குப் புறம்பானவை.
கட்டுரையில் கூறப்பட்டுள்ளபடி எந்தவொரு ஆவணமோ அல்லது திட்டமோ எல்ஐசியால் ஒருபோதும் தயாரிக்கப்படவில்லை. இது எல்ஐசி, அதானி குழும நிறுவனங்களில் மட்டும் மிக அதிக நிதியை முதலீடு செய்வதுபோன்ற ஒரு தவறான தோற்றத்தை உருவாக்குகிறது.
எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள் என்பது, உயா்மட்டக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில், தீவிர கவனத்துடன் சுயமாக எடுக்கப்படுகின்றன. வேறு எந்த அரசு அமைப்புக்கும் அத்தகைய முடிவுகளில் எந்தப் பங்கும் இல்லை.
இந்தக் கட்டுரை எல்ஐசியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.