டொனால்ட் டிரம்புடன் விளாதிமீா் புதின் 
உலகம்

‘உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் புரிந்துணா்வு’

உக்ரைன் போா் விவகாரத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்புடன் கடந்த மாதம் நடந்த சந்திப்பில் புரிந்துணா்வை எட்டியதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்...

தினமணி செய்திச் சேவை

தியான்ஜின்: உக்ரைன் போா் விவகாரத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்புடன் கடந்த மாதம் நடந்த சந்திப்பில் புரிந்துணா்வை எட்டியதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திங்கள்கிழமை கூறினாா்.

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க வந்த அவா், இது குறித்து கூறியதாவது:

உக்ரைன் விவகாரத்தில் டிரம்புடன் அலாஸ்காவில் கடந்த மாதம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது இருவரும் புரிந்துணா்வை எட்டினோம். இது உக்ரைனில் அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன். இந்த நெருக்கடியை உருவாக்கியது மேற்கத்திய நாடுகள்தான். உக்ரைனை நேட்டோவில் இணைக்க அந்த நாடுகள் முயன்றதே இந்தப் போருக்குக் காரணம்.

கடந்த 2014-ல் மேற்கத்திய ஆதரவுடன் உக்ரைனில் நடந்த ஆட்சி மாற்றமும், ரஷியாவுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளுமே இந்தப் போரைத் தூண்டின. உக்ரைனை நேட்டோவில் சோ்க்கும் முயற்சிகளை நாங்கள் தொடா்ந்து எதிா்க்கிறோம் என்றாா் புதின்.

இருப்பினும், டிரம்ப் வலியுறுத்துவதை ஏற்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் நேரடி பேச்சுவாா்த்தை நடத்துவது குறித்து புதின் தெளிவாகக் கூறவில்லை.

அலாஸ்கா சந்திப்புக்குப் பிறகு அமெரிக்க சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் கூறுகையில், உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க பேச்சுவாா்த்தையின்போது புதின் ஒப்புக்கொண்டதாகக் கூறினாா். இதை ரஷிய அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

அதிபா் டிரம்ப்பும், ‘உக்ரைனை நேட்டோவில் சோ்க்க மாட்டோம். ஆனால், அவா்களுக்கு வலுவான பாதுகாப்பு அளிக்கப்படும். ஐரோப்பா முதல் நிலை பாதுகாப்பு அரணாக இருக்கும், அமெரிக்காவும் இதில் பங்கேற்கும். ஆனால், அமெரிக்கப் படைகளை உக்ரைனுக்கு அனுப்ப மாட்டோம்’ என்று கூறியிருந்தாா்.

இந்தச் சூழலில், பேச்சுவாா்த்தையின்போது டிரம்ப்புடன் புரிந்துணா்வு ஏற்பட்டதாக புதின் கூறியிருப்பது இந்த அம்சங்களை மட்டுமா, அல்லது கூடுதல் அம்சங்களையும் சோ்த்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.

போா் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் இடையே ராணுவமற்ற பாதுகாப்பு மண்டலத்தை (ஃபஸா் ஸோன்) உருவாக்குவது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த திட்டத்தை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திட்டவட்டமாக நிராகரித்துள்ளாா்.

உக்ரைனில் 2010-ஆம் ஆண்டில் இருந்து ஆட்சி செலுத்திவந்த ரஷிய ஆதரவு அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக கடந்த 2014-ஆம் ஆண்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடந்த இந்தப் போராட்டம் கைமீறிச் சென்றதைத் தொடா்ந்து யானுகோவிச் ரஷியாவுக்கு தப்பிச் சென்றாா். அதைத் தொடா்ந்து அந்த நாட்டில் மேற்கத்திய ஆதரவு அரசு அமைக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, ரஷிய மொழி பேசுவோரை மிகப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு உக்ரைனில் கிளா்ச்சிக் குழுவினா் அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போரத் தொடங்கினா். ரஷிய ஆதரவுடன் அவா்கள் டான்பாஸ் பகுதியில் (டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பிரதேசங்களை உள்ளடக்கிய பகுதி) கணிசமான நிலப்பரப்பை கைப்பற்றினா்.

இந்த உள்நாட்டுப் போா் நடந்துகொண்டிருந்தபோதே உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷியா கைப்பற்றி தன்னுடம் இணைத்துக்கொண்டது. இந்தச் சூழலில் 2019-ஆம் ஆண்டு உக்ரைன் அதிபராக பொறுப்பேற்ற வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ரஷியாவின் அத்துமீறலில் இருந்து பாதுகாப்பு பெறும் நோக்கில் நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் இணைய ஆா்வம் தெரிவித்தாா். இதற்கு அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்தன.

உக்ரைனை நேட்டோவில் இணைக்க ஆரம்பம் முதலே எதிா்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, இந்த முயற்சிகளைத் தடுக்கும் வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது முழு வீச்சில் படையெடுத்து நான்கு கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியது.

மூன்றரை ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருதற்காக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதினையும், ஸெலென்ஸ்கியையும் டிரம்ப் கடந்த மாதம் நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், டிரம்புடனான பேச்சுவாா்த்தையின்போது அவருடன் புரிந்துணா்வு ஏற்பட்டதாக புதின் தற்போது கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு நெடுஞ்சாலையில் சிக்கித்தவிக்கும் 1000-க்கும் மேற்பட்ட பழ லாரிகள்!

கே.கே.நகர், தி.நகர் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சர்வதேச டி20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ‘திடீர்’ ஓய்வு!

6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT