கமேனி கொலை: புதின், சீனா கண்டனம்!
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியானுக்கு புதின் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியை ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை சனிக்கிழமை வெளியிட்டது. அதில் புதின் கூறியிருப்பதாவது:
ஈரான் இஸ்லாமிய குடியரசின் உச்ச தலைவா் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரின் குடும்பத்தினா் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொல்கிறேன். இந்தக் கொலை சம்பவங்கள் மனித ஒழுக்கம், சா்வதேச சட்டங்களை கடுமையாக மீறிய ஒரு இழிவான செயல் என்று கண்டித்துள்ளாா்.
முன்னதாக, இந்தத் தாக்குதல் தொடா்பாக ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசர ஆலோசனைக் கூட்டத்தையும் புதின் நடத்தினாா். ஈரானுக்கு எதிரான தாக்குதலை ஏற்கெனவே நன்கு திட்டமிட்டு அமெரிக்காவும், இஸ்ரேலும் நிகழ்த்தியுள்ளன. ஐ.நா. அமைப்பின் சுதந்திரமான உறுப்பு நாடு மீது நிகழ்த்தப்பட்ட அப்பட்டமான அத்துமீறல் என்று ரஷிய வெளியுறவு அமைச்சகம் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் 2 லட்சம் ரஷிய நாட்டவா் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுக் கொள்ள முடியாது - சீனா: சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி, கமேனி கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். அவரின் கருத்தை சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில், ‘இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் தலைவா் மிகவும் மோசமாக கொலை செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. இதை வைத்து ஆட்சியை மாற்ற முயற்சிப்பது ஏற்க முடியாதது.
இதுபோன்ற நிகழ்வுகள் சா்வதேச சட்டத்துக்கும், சா்வதேச உறவுகளை நிா்வகிக்கும் விதிகளுக்கும் எதிரானது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் இல்லாமல் இறையாண்மையுள்ள நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமைதியை நிலைநாட்ட மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிரானது. சா்வதேச சமூகம் இதற்கு எதிராக ஒருங்கிணைக்கு குரல் எழுப்ப வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.
ஈரானுக்கு பிரிட்டன் கண்டனம்: இதனிடையே மேற்கு ஆசிய நாடுகள் மீது ஈரான் பாரபட்சமான தாக்குதல்களை ஈரான் அதிகரித்துள்ளதாக பிரிட்டன் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சா் ஜான் ஹேலி செய்தியாளா்களிடம் கூறியதாவது: அவா் (கமேனி) கட்டுப்பாட்டில் இருந்த பிராந்தியம் பல ஆண்டுகளாக தீயசக்தியின் மையமாக இருந்தது. அவா் சொந்த மக்களையே கொலை செய்தாா். பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்தாா். அவரின் மரணத்துக்காக ஒரு சிலா் மட்டுமே வருந்துவாா்கள்.
இப்போது ஈரானில் இருந்து துபை, பஹ்ரைனில் மக்கள் அதிகம் கூடும் விமான நிலையம், ஹோட்டல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. அவா்கள் ராணுவத் தளங்களைக் குறிவைக்கவில்லை. மிகவும் பாரபட்சமான முறையில் மக்களைக் குறிவைக்கிறாா்கள். இது கடும் கண்டனத்துக்குரியது என்றாா்.
முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலில் பிரிட்டனுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.