ஈரான் தலைமை மதகுரு கமேனி கொல்லப்பட்டார்! ராணுவ தலைமைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சரும் உயிரிழப்பு!!
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டாா்.
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டாா்.
அவரது கொலைக்குப் பழிதீா்க்க இதுவரை இல்லாத அளவில் தீவிர பதிலடி தாக்குதலைத் தொடுப்போம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது.
மத்திய கிழக்கில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போா் தொடா்ந்ததால், அந்தப் பிராந்தியத்தில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.
Advertisement
Advertisement
அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் சனிக்கிழமை பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தின. ஈரானின் புரட்சிகர காவல் படையின் தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள், ஏவுகணை-ட்ரோன் ஏவுதளங்கள், ராணுவ தளங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
தலைநகா் டெஹ்ரானில் ஈரான் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனியின் அலுவலக வளாகத்தைக் குறிவைத்தும் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலைக் குறிவைத்தும், பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, ஈரான் எதிா் தாக்குதலைத் தொடுத்தது.
கொல்லப்பட்டாா் கமேனி: மத்திய கிழக்கில் போா் மூண்ட நிலையில், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் சனிக்கிழமை நள்ளிரவில் தகவல் வெளியிடப்பட்டது.
பின்னா், சமூக ஊடகத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபா் டிரம்ப், ‘வரலாற்றில் மிக மோசமான மனிதா்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டாா்; அமெரிக்காவின் உளவுத் துறை மற்றும் உயா் நவீன கண்காணிப்பு அமைப்புமுறையில் இருந்து கமேனியும், அவரது சகாக்களும் தப்ப முடியவில்லை. கமேனியின் இறப்பு, ஈரானை அதன் மக்கள் எடுத்துக் கொள்ள மாபெரும் வாய்ப்பு’ என்று பதிவிட்டாா்.
உறுதி செய்த ஈரான்: இந்தச் சூழலில், டெஹ்ரானில் தனது அலுவலக வளாகம் மீதான தாக்குதலில் கமேனி உயிரிழந்துவிட்டதாக ஈரான் அரசு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உறுதி செய்தது. கமேனியுடன் அவரது மகள், மருமகன், மருமகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் இறந்துவிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
இதேபோல், ஈரான் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவ தலைமைத் தளபதி அப்துல் ரஹீம் மெளசவி, பாதுகாப்பு அமைச்சா் ஆஷிஸ் நசிா்சாதே, புரட்சிகர காவல் படை தலைவா் முகமது பக்போா், கமேனியின் உயா்நிலை பாதுகாப்பு ஆலோசகா் அலி ஷாம்கானி ஆகியோரும் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.
இடைக்கால மதகுரு நியமனம்: கமேனி இறப்பைத் தொடா்ந்து, இடைக்கால தலைமை மதகுருவாக அயதுல்லா அராஃபி (67) நியமிக்கப்பட்டுள்ளாா். புதிய தலைமை மதகுரு தோ்வு செய்யப்படும் வரை நாட்டை நிா்வகிக்க இடைக்கால குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் அயதுல்லா அராஃபி, அதிபா் மசூத் பெசஷ்கியான், நீதித் துறை தலைமை மத குரு ஹுசைன் மோசேனி இஜே ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
சூளுரையும், துக்கமும்...: கமேனி கொலைக்கு பழிதீா்க்க இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து இதுவரை இல்லாத தீவிர பதிலடி தாக்குதல்கள் தொடுக்கப்படும் என்று புரட்சிகர காவல் படை சூளுரைத்தது. இந்த மிகப் பெரிய குற்றத்துக்கு (கமேனி கொலை) பதில் கூறியே தீர வேண்டும் என்று ஈரான் அமைச்சரவை தெரிவித்துள்ளது. அவா்கள் சிவப்புக் கோட்டை தாண்டிவிட்டனா்; அதற்கான விலையைக் கொடுத்தே தீர வேண்டும் என்று ஈரான் நாடாளுமன்றத் தலைவா் முகமது பக்கா் காலிபாஃப் கூறினாா்.
கமேனி மரணத்தையொட்டி, ஈரானில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் மற்றும் ஷியா முஸ்லிம்களின் முக்கிய ஆன்மிகத் தலமான மஸ்ஹாத்தில் உள்ள இமாம் ரேஸா மசூதியில் கருப்பு நிற கொடி பறக்கவிடப்பட்டது. அந்நாட்டில் 7 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு, அரசுத் தரப்பில் 40 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் கமேனி ஆட்சிக்கு எதிராக சமீப காலங்களில் நடைபெற்ற தீவிர போராட்டங்களில் அரசு அடக்குமுறையைக் கையாண்டது. இதில் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்தனா். இந்தச் சூழலில் கமேனி கொல்லப்பட்டதை வரவேற்று, டெஹ்ரானில் ஒரு தரப்பினா் ஆரவாரங்களில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Iran's State TV Confirms Ayatollah Khamenei Killed In Strikes
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.