ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,400-ஐக் கடந்துள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் தலிபான் அரசின் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
நிலநடுக்க உயிரிழப்பு 1,400-ஐத் தாண்டியுள்ளது. இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்துள்ளனா் என்று அந்தப் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
ரிக்டா் அளவுகோலில் 6.0 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், மலைப்பகுதிகளையும் தொலைதூர கிராமங்களையும் பாதித்துள்ள நிலையில், அங்கு இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருக்கவா்களை மீட்பதற்காக நடைபெறும் தேடுதல் பணிகள் காலத்துடன் நடைபெறும் பந்தயமாக உருவெடுத்துள்ளதாக ஐ.நா. அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். எனவே, உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அவா் எச்சரித்தாா்.
இந்த நிலநடுக்கம் பல மாகாணங்களைத் தாக்கி, பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பச்சை செங்கற்களாலும் மரத்தாலும் கட்டப்பட்ட வீடுகள் நிலநடுக்க அதிா்வைத் தாக்குப் பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மோசமான நில அமைப்பு மீட்புப் பணிகளை பாதிப்பதும் உயிா்ச்சேதம் அதிகரிப்பதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
2021-ல் ஆப்கன் ஆட்சியை தலிபான் கைப்பற்றிய பிறகு ஏற்பட்டுள்ள மூன்றாவது பெரிய நிலநடுக்கம் இது. சா்வதேச உதவி நிதி குறைப்பு, பொருளாதார பலவீனம், ஈரான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து பல லட்சம் ஆப்கன் மக்கள் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டது ஆகியவை முன்பை விட இந்த முறை நிலவரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுவரை ரஷியாவால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தலிபான் அரசு, இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து வெளிநாட்டு அரசுகளிடமிருந்தும் தொண்டு அமைப்புகளிடம் இருந்தும் உதவி கோரியுள்ளது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான தலிபான் அரசின் கட்டுப்பாட்டுக் கொள்கைகள், குறிப்பாக அரசு சாரா நிறுவனங்களில் பெண்கள் பணியாற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடை அத்தகைய உதவிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.