சீனாவில் புதின், கிம் ஜாங் உன்! அமெரிக்காவுக்கு எதிரான சதி என டிரம்ப் குற்றச்சாட்டு!
சீனாவில் அமெரிக்காவுக்கு எதிராக சதித் தீட்டப்பட்டதாக டிரம்ப் குற்றச்சாட்டு...
இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து 80 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், சீனாவில் நடத்தப்பட்ட விழாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு விழாவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஈரான் அதிபர் மசூத் பெஜேஷ்கியன் உள்பட சீனாவின் 26 நட்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.
சீனாவின் நவீன ஏவுகணைகளும் ராணுவத் தளவாடங்களும் போர் விமானங்களும் இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் காட்சிபடுத்தப்பட்டன.
Advertisement
Advertisement
ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை திறந்தவெளி வாகனத்தில் சென்று ஏற்றுக்கொண்ட ஷி ஜின்பிங், “எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் சீனா அஞ்சாது, மனிதகுலமானது போர் அல்லது அமைதி ஆகியவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் சூழலுக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளது” என்றார்.
இந்த அணிவகுப்பு குறித்து சமூக வலைதளத்தில் டிரம்ப் பதிவிட்டிருப்பதாவது:
”வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடம் இருந்து சீனா சுதந்திரம் பெறுவதற்காக அமெரிக்கா அளித்த மகத்தான ஆதரவையும், அமெரிக்கர்கள் சிந்திய ரத்தத்தையும் அதிபர் ஜின்பிங் குறிப்பிடுவாரா என்பது மிகப்பெரிய கேள்வி.
சீன வெற்றிக்காக பலியான அமெரிக்கர்கள் மதிக்கப்படுவார்கள், நினைவுகூரப்படுவார்கள் என்று நம்புகிறேன். அமெரிக்காவுக்கு எதிராகச் செய்யும் சதிகளுக்கு புதின் மற்றும் கிம் ஜாங் உன்னுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, புதின் - கிம் ஜாங் உன் இருவரும் சுமார் இரண்டரை மணிநேரம் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ரஷியாவுக்கு வருமாறும் கிம் ஜாக் உன்னுக்கு புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை.
எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள்கள் சீனப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த அணிவகுப்பில் கலந்துகொள்ளாமல் நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
Putin, Kim Jong Un in China! Trump accuses of conspiracy against America
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.