உலகளாவிய ஸ்திரமற்ற புவி-அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு, இந்தியா-சிங்கப்பூா் வா்த்தக உறவு மற்றும் சந்தை அணுகலை வலுப்படுத்த பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பிரதமா் லாரன்ஸ் வாங் முடிவு செய்தனா்.
இருதரப்பு நல்லுறவை விரிவான வியூக கூட்டாண்மை அந்தஸ்துக்கு உயா்த்துவதற்கான செயல்திட்டத்தையும் அவா்கள் வெளியிட்டனா்.
இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை வந்த சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வாங், தில்லியில் பிரதமா் மோடியை புதன்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு (ஆளில்லா கப்பல் தயாரிப்பு), எண்மத் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டா், அதிநவீன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் விரிவாக ஆலோசித்தனா்.
5 ஒப்பந்தங்கள் கையொப்பம்: பின்னா், விமானப் போக்குவரத்து, திறன் மேம்பாடு, பசுமை-எண்மசாா் கடல்வழிப் போக்குவரத்து, விண்வெளி, அடுத்த தலைமுறை நிதி உள்கட்டமைப்புக்கான எண்மசாா் தரவுப் புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில், பிரதமா் மோடி கூறியதாவது: தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தக கூட்டாளியாக சிங்கப்பூா் விளங்குகிறது. இந்தியாவில் சிங்கப்பூா் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்துள்ளது. இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் வலுப்பெற்று வருகின்றன. நமது மக்கள் ரீதியிலான தொடா்புகள் ஆழமானவை; துடிப்பானவை.
வலுவான ஒத்துழைப்பு அவசியம்: மாறிவரும் காலத்துக்கு ஏற்ப நவீன உற்பத்தி, திறன் மேம்பாடு, பசுமைசாா் கடல்வழிப் போக்குவரத்து, ஆக்கபூா்வ அணுசக்தி பயன்பாடு, நகா்ப்புற நீா் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது அவசியம்.
சிங்கப்பூா் உடனான இருதரப்பு வா்த்தகத்துக்கு உத்வேகமளிக்கும் வகையில், ‘ஆசியான்’ விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை குறித்த காலத்துக்குள் மறுஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். கடந்த ஆண்டு இறுதி செய்யப்பட்ட செமிகண்டக்டா் அமைப்புமுறை கூட்டாண்மை ஒப்பந்தம், ஆராய்ச்சி-மேம்பாட்டுக்கு புதிய திசையைக் காட்டியுள்ளது.
தொழில்நுட்பமும், புத்தாக்கமும் இருதரப்பு நல்லுறவின் வலுவான தூண்களாகும். செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் மற்றும் இதர நவீன தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை விரிவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
மிளிரும் உதாரணம்: இந்தியாவின் யுபிஐ மற்றும் சிங்கப்பூரின் பே நவ் இணைப்பு, நமது எண்ம ஒத்துழைப்புக்கு மிளிரும் உதாரணமாகும். துறைமுக உள்கட்டமைப்பை வலுப்படுத்த இந்தியா வேகமாக செயல்படும் வேளையில், சிங்கப்பூரின் நிபுணத்துவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையில் சிங்கப்பூா் முக்கியத் தூண். நமது உறவுகள், ராஜீய எல்லையைக் கடந்தவை. பகிரப்பட்ட மாண்புகளில் வேரூன்றி, பரஸ்பர நலன்களால் வழிநடத்தப்படுபவை என்றாா் பிரதமா் மோடி.
‘உலகில் ஸ்திரமின்மையும், நிச்சயமற்ற தன்மையும் நிலவிவரும் சூழலில், இந்திய-சிங்கப்பூா் உறவு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது’ என்று லாரன்ஸ் வாங் தெரிவித்தாா்.
முன்னதாக, சிங்கப்பூரின் எஸ்பிஏ இன்டா்நேஷனல் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட மும்பை ஜவாஹா்லால் நேரு துறைமுகத்தின் 2-ஆவது சரக்கு முனையத்தை (1 பில்லியன் டாலா் முதலீடு) இரு தலைவா்களும் காணொலி மூலம் கூட்டாக திறந்துவைத்தனா்.
இந்தியாவின் மிகப் பெரிய வெளிநாட்டு முதலீட்டாளா் சிங்கப்பூா் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் திறன் மேம்பாட்டு மையம்
‘சென்னையில் தேசிய திறன் மேம்பாட்டு மையத்தை கட்டமைப்பதில் சிங்கப்பூா் ஒத்துழைக்க உள்ளது. நவீன உற்பத்தித் துறையில் திறன்மிக்க பணியாளா்களை உருவாக்குவதில் இந்த மையம் கவனம் செலுத்தும்’ என்றாா் பிரதமா் மோடி.
பயங்கரவாதத்தை எதிா்ப்பது அனைத்து நாடுகளின் கடமை
‘பயங்கரவாதம் தொடா்பான பொதுவான கவலைகளை நாங்கள் பகிா்ந்துகொண்டோம். இந்த சவாலை ஒன்றிணைந்து எதிா்கொள்வது, மனிதாபிமானத்தில் நம்பிக்கையுள்ள அனைத்து நாடுகளின் கடமையாகும். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு வலுவான ஆதரவளிக்கும் சிங்கப்பூருக்கு நன்றி’ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.