பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின், சகோதரி அலீமா கானின் மீது, 2 பெண்கள் முட்டைகளை வீசியுள்ளனர்.
பாகிஸ்தானின் தெஹ்ரிக் - இ - இன்சாஃப் கட்சியின் நிறுவனரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இம்ரான் கானின் மீதான வழக்குகளில் ஒன்றான டொஷாகானா வழக்கின் விசாரணைக்காக, இன்று (செப்.5) ராவல்பிண்டி சிறைக்கு வருகை தந்த அவரது சகோதரி அலீமா கான் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.
அப்போது, கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்த அலீமா கானின் மீது 2 பெண்கள் முட்டைகளை வீசியுள்ளனர். இதனால், அடியாலா சிறை வாசலில் பெரும் பரபரப்பான சூழல் உருவானது. இருப்பினும், தான் நலமாக உள்ளதாகக் கூறி அவர் அந்தச் சந்திப்பைத் தொடர்ந்துள்ளார். இதுகுறித்த விடியோக்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
“எங்கள் மீதான தாக்குதல்களை நாங்கள் கண்டுக்கொள்ள மாட்டோம். இப்படியொரு சம்பவம் நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்” எனக் கூறியுள்ளார்.
ஆனால், தொடர்ந்து பல கடுமையான கேள்விகள் அவர் முன் வைக்கப்பட்டதாகவும், அவை எதற்கும் பதிலளிக்காமல் அலீமா கான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அலீமா கானின் மீதான தாக்குதல்களை எதிர்த்து இம்ரான் கானின் கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர் மீது முட்டைகளை வீசிய பெண்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து, பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகையில், அப்பெண்கள் இருவரும் இம்ரான் கானின் கட்சி ஆட்சி செய்யும், கைபர் பக்துன்குவா மாகாணத்தின் அரசு ஊழியர்கள் எனவும், சம்பளம் முறையாக வழங்காதது மற்றும் பிற முறைகேடுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளை அலீமா கான் புறக்கணித்ததால், அவர் மீது அப்பெண்கள் முட்டைகளை வீசியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: சொத்து வரி விவகாரம்! பிரிட்டன் துணைப் பிரதமர் ராஜிநாமா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.