இம்ரான் கானுக்காக ஒன்று சேர்ந்த கபில் தேவ் உள்ளிட்ட சர்வதேச அணிகளின் முன்னாள் கேப்டன்கள்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நலனுக்காக சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் கடிதம்...
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நலனுக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் பாகிஸ்தான் அரசு வழங்க மறுக்கின்றது என அவரது குடும்பத்தினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குற்றம்சாட்டினர்.
Advertisement
Advertisement
இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளானதைத் தொடர்ந்து, இம்ரான் கானை சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், அவருக்கு சிறையில் முறையான மருத்துவம் மற்றும் சட்ட ரீதியான வசதிகள் வழங்கப்படுவதில்லை எனக் கூறப்பட்டது.
இதில், சிறையிலுள்ள கடினமான சூழல்களாலும், போதிய மருத்துவ வசதிகள் வழங்கபடாததினாலும் இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீத பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இது சர்வதேச அளவில் மீண்டும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், இம்ரான் கானுக்கு சர்வதேச தரத்திலான மருத்துவ சேவைகள் வழங்கப்பட வேண்டுமென பாகிஸ்தான் அரசை வலியுறுத்தி கபில் தேவ், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் இந்திய கேப்டன்கள் உள்பட சர்வதேச கிரிக்கெட் அணிகளின் 14-க்கும் அதிகமான முன்னாள் கேப்டன்கள் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளனர்.
இதுபற்றி, அந்தக் கடிதத்தில் கூறப்பட்டதாவது:
“உலக கிரிக்கெட் வரலாற்றில் புகழ்பெற்ற ஜாம்பவானான இம்ரான் கானின் உடல்நிலைக் குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வருத்தமளிக்கின்றன. இம்ரான் கான் போன்ற ஒருநாட்டின் முன்னாள் தலைவர் மற்றும் உலக விளையாட்டு பிரபலம் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகின்றோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில், மைக்கேல் அதர்டன், ஆலன் பார்டர், மைக்கேல் பிரேர்லி, கிரெக் சேப்பல், இயன் சேப்பல், பெலிண்டா கிளார்க், டேவிட் கோவர், கிம் ஹியூஸ், நாசர் ஹுசைன், கிளைவ் லாயிட், ஸ்டீவ் வாக் மற்றும் ஜான் ரைட் போன்ற சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 17) கூட்டாகக் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.
Former captains of international cricket teams, including India, have written a letter for the welfare of the country's former Prime Minister Imran Khan, who is in prison in Pakistan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.