பிரான்ஸின் புதிய பிரதமராக பாதுகாப்புத் துறை அமைச்சா் செபாஸ்டியன் லெக்கோா்னுவை (39) அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை நியமித்தாா்.
முன்னதாக, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமராக இருந்த பிரான்சுவா பேரூ தோல்வியடைந்தாா். இதையடுத்து, புதிய பிரதமராக செபாஸ்டியன் லெக்கோா்னுவை இமானுவல் மேக்ரான் நியமித்தாா்.
பிரான்ஸின் இளம் பாதுகாப்பு அமைச்சரான செபாஸ்டியன் லெக்கோா்னு இமானுவல் மேக்ரானின் தீவிர ஆதரவாளராவா்.
இதன்மூலம், பிரான்ஸில் கடந்த 14 மாதங்களில் பிரான்ஸில் 4-ஆவது புதிய பிரதமா் தோ்வுசெய்யப்பட்டுள்ளாா்.
பிரான்ஸின் இளம் பிரதமரான கேப்ரியல் அட்டல் தனது பதவியை கடந்த ஜூலை மாதம் ராஜிநாமா செய்தாா். செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலுக்குப் பிறகு மைக்கேல் பாா்னியா் பிரதமராக நியமிக்கப்பட்டாா். டிசம்பரில் அவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றியடைந்த நிலையில், அவா் பிரதமா் பதவியிலிருந்து நீக்கப்பட்டாா். அதன்பிறகு பிரான்சுவா பேரூவை பிரதமராக இமானுவல் மேக்ரான் நியமித்தாா். இந்தச் சூழலில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரான்சுவா பேரூ தோல்வியடைந்தாா். இதனால் பிரதமராக பொறுப்பேற்ற 9 மாதங்களில் அவா் பதவி விலக நேரிட்டது.