“துப்பாக்கிகள் உயிரைக் காக்கின்றன”..!
_ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும் அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலருமான சார்லி கிர்க் கொல்லப்பட்ட நிலையில் அவரின் பழைய எக்ஸ் பதிவுகளும் அவரின் சர்ச்சை பேச்சுகளும் வைரலாகி வருகின்றன.
அமெரிக்காவில் அதிகரித்துவரும் துப்பாக்கி கலாசாரத்துக்கு மத்தியில் யூட்டா பல்கலைக்கழக வளாகத்தில் செப். 10 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது, சார்லி கிர்க்கின் கழுத்தில் திடீரென எங்கிருந்தோ சுடப்பட்ட ஒரு குண்டு பாய்ந்ததில், அந்த இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்து பலியானார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர், ஏன்... அவரின் வலது கை என்று சொல்லக்கூடிய வகையில் மிகவும் பிரபலமான சார்லி கிர்க்கின் மரணத்தால் மனம் நொந்த டிரம்ப், அவரின் மறைவுக்குத் துக்கம் அனுசரிக்கும் விதமாக தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவிட்டதுடன், அதிபரின் சுதந்திர பதக்கத்தையும் அறிவித்தார்.
மாணவர்களின் முகமாகக் கருதப்பட்ட சார்லி, அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்தவர். இவர் தன்னுடைய 18 ஆவது வயதில் 2012 ஆம் ஆண்டு, ‘டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ’ என்ற இளைஞர் அமைப்பை உருவாக்கினார்.
எழுத்தாளர், வர்ணனையாளர், பேச்சாளர், தேசிய கவுன்சலிங் ஆலோசகர், அதிபர் டிரம்ப்பின் மகன் டிரம்ப் ஜூனியருக்கு வலது கரம் என பன்முகத்தன்மை கொண்டவராகவும் இருந்த சார்லி, தொடக்கம் முதலே குடியரசுக் கட்சிக்குத் தன்னுடைய ஆதரவை தெரிவித்து வந்தார்.
அமெரிக்க பொதுத் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றிக்காக கிட்டத்தட்ட அனைத்து இளம் வாக்காளர்களையும் தன் பக்கம் இழுத்துப் பாடுபட்டார் சார்லி என்றுதான் சொல்ல வேண்டும்.
பொதுவெளி மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் கோலோச்சிய சார்லியை இன்ஸ்டாகிராமில் மட்டும் 70 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்தனர்.
சார்லி கொல்லப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவர் பழமைவாத சிந்தனையும், அவரின் பிற்போக்குத்தனமான பேச்சுகளும் பல முரண்பாடுகளை சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளன.
சார்லி கொல்லப்பட்டதற்கு ஆளும் குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் கவலை தெரிவித்திருந்தாலும், அமெரிக்காவின் இரண்டாவது சட்டத்திருத்தம் மற்றும் துப்பாக்கியால் அதிகளவிலான கொலைகள் நடப்பது தொடர்பாக, சார்லி கிர்க் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட பதிவு ஒன்று இப்போது மிகவும் வைரலாகி வருகிறது.
LGBTQ முதல் துப்பாக்கி கலாசாரம் வரை...
டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக மட்டும் அல்லாமல், பழமைவாத கருத்துகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்த சார்லி, 2023 ஆம் ஆண்டில் டென்னசியில் உள்ள நாஷ்வில்லில் உள்ள கிறிஸ்டியன் கவெனன்ட் பள்ளியில் மூன்று ஒன்றுமறியாத குழந்தைகள் உள்பட 6 கொல்லப்பட்டபோது,
இரண்டாவது சட்டத் திருத்தத்தின் ஒரு பகுதிதான் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம். நாட்டில் உள்ள குடிமக்கள் துப்பாக்கிகள் வைத்திருப்பது சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும். இதனால், துப்பாக்கிகளால் பலர் கொல்லப்படுவதை நீங்கள் முற்றிலுமாகக் குறைக்க முடியாது. ஆனால், பள்ளியின் வெளியே துப்பாக்கியுடன் காவலர்கள் இருப்பதால் அதனை ஓரளவு குறைக்கலாம். சுதந்திரத்தின் விலை இதுதான்!
இந்தச் சட்டத்தால் துரதிர்ஷ்டவசமாக சில மரணங்களும் நிகழ்கின்றன. கடவுள் கொடுத்த உயிரை சட்டத் திருத்தத்தின் மூலம் காப்பாற்றலாம்.
பள்ளி துப்பாக்கிச் சூடுகளை எப்படி நிறுத்துவீர்கள்? பேஸ்பால் விளையாட்டுகளில் துப்பாக்கிச் சூடுகளை எப்படி நிறுத்தினோம்? ஏனென்றால் பேஸ்பால் விளையாட்டுகளுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உள்ளனர்.
விமான நிலையங்களில் நடக்கும் அனைத்து துப்பாக்கிச் சூடுகளையும் எப்படி நிறுத்தினோம்? வங்கிகளில் நடக்கும் அனைத்து துப்பாக்கிச் சூடுகளை நிறுத்தினோம். இது எல்லாம் துப்பாக்கி ஏந்தியவர்களால்தான் நடந்தது”
எனப் பேசியிருந்தார் சார்லி.
பெண்கள் மீதான பார்வை
பழமைவாத சிந்தனையில் மூழ்கியிருந்த சார்லி, “பெண்கள் தொழில்முறை வாழ்க்கைவிட தாய்மைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பெண்கள் தங்கள் உடலைவிட வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அவர்களின் பிறப்புக் கட்டுப்பாடு அதிகளவில் பாதிக்கப்படுகிறது” என்றும் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது தாக்கு
பெண்கள் மட்டுமின்றி தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்த சார்லி, LGBTQ - தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகள் மற்றும் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார்.
பாலியல் மற்றும் பாலினம் ரீதியிலான முற்போக்கு என்பது “பாலியல் அராஜகம்” என்றும் சார்லி கிர்க் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதுமட்டுமின்றி, இனவாதத்தை ஆதரிக்கும் வகையில் கருப்பினத்தவர்களுக்கு எதிராகவும் சார்லி சில கருத்துகளை முன்வைத்துள்ளார். இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியிருந்தது.
வெள்ளை நிற மக்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் குறித்தும், மார்டின் லூதர் கிங் மிகவும் மோசமானவர், அவர் நல்லவர் கிடையாது என்று மீண்டும் மீண்டும் பேசி வந்துள்ளார்.
இதுமட்டுமல்ல, கருக்கலைப்பு என்பது இனப்படுகொலையைவிட மோசமானது, “உங்களது 10 வயது மகள் வன்கொடுமையால் கருவுற்றால் என்ன செய்வீர்கள்?” என்று கேள்விக்கு, “அந்தக் குழந்தையை என் மகள் பெற்றெடுக்க வேண்டும் என்றே சொல்வேன்” என்று அதிர்ச்சியளிக்கும் பதிலையும் கொடுத்திருந்தார் சார்லி.
புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான காட்ஃபாதரில், “If you hold a gun and I hold a gun, we can talk about the law” - நீயும் துப்பாக்கி வைத்திருக்கிறாய்.. நானும் துப்பாக்கி வைத்திருக்கிறேன் என்றால் நாம் சட்டத்தைப் பற்றிப் பேசலாம் என்று சொல்வார் நாயகன் மார்லன் பிராண்டோ.
சார்லி கிர்க்கும் Gun saves lives என்றுதான் எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், கடைசியாக அவரைப் பொருத்தவரை Gun kills life!
இதையும் படிக்க : யார் இந்த சார்லி கிர்க்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.