பாலஸ்தீன அரசு ஒருபோதும் அமையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஸா மீது இஸ்ரேலின் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் தொடர்ந்து கண்டனமும் எதிர்ப்புகளும் தெரிவித்து வந்தாலும், அவற்றையெல்லாம் இஸ்ரேல் கண்டுகொள்வதாகவேயில்லை.
இந்த நிலையில், பாலஸ்தீன அரசு ஒருபோதும் அமையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகப் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஜெருசலேம் அருகேயுள்ள மாலே அடுமிம் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நெதன்யாகு பேசுகையில், ``பாலஸ்தீனிய அரசு என்ற ஒன்று எப்போதும் அமையாது என்ற நமது வாக்குறுதியை நாம் நிறைவேற்றுவோம். இந்த இடம் நமக்கே சொந்தம்.
நமது பாரம்பரியம், நிலம், பாதுகாப்பு ஆகியவற்றை நாம் உறுதி செய்வோம். இந்த நகரத்தின் மக்கள்தொகையையும் இரட்டிப்பாக்குவோம்’’ என்று தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, அவர் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியும் ஒரு சர்ச்சைக்குள்ளான பகுதியாகவே இருந்து வருகிறது.
வெஸ்ட் பேங்க் பகுதியில் ஜெருசலேமுக்கும் - பாலஸ்தீனத்தின் வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் பாதைக்கும் அருகே அமைந்துள்ள மாலே அடுமிம் பகுதியில் குடியிருப்புகளை ஏற்படுத்த இஸ்ரேல் நீண்டகாலமாகவே முயற்சி செய்து வருகிறது. மேலும், இந்தப் பகுதிக்குச் செல்லும் இஸ்ரேல் மக்களுக்கு ஊக்கத் தொகையையும் அந்நாடு வழங்குகிறது.
இருப்பினும், இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கும் சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியதால், அதனை இஸ்ரேல் நிறுத்தி வைத்திருந்தது.
இந்த நிலையில், மாலே அடுமிம் அருகே சுமார் 12 சதுர கி.மீ. பரப்பளவுகொண்ட இ1 (E1) எனும் நிலப்பரப்பில் குடியிருப்புகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போதுதான், `பாலஸ்தீனத்தின் அரசு அமையாது’ என்று நெதன்யாகு தெரிவித்தார்.
இதையும் படிக்க: சார்லி கிர்க் கொலை: குற்றவாளி பற்றித் தகவல் தந்தால் 1 லட்சம் டாலர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.