அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க்கை கொன்றவரை புலான்யவுப் பிரிவு வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், யூட்டா பல்கலைக்கழகத்தில் செப்.10 ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து கொலைக் குற்றவாளி தேடப்பட்டுவந்த நிலையில், டைலர் ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில் டைலர் ராபின்சன் குடும்பத்தினர் கூறுகையில், “அவர் சமீபத்திய காலமாகவே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்ததாகவும், சார்லி கிர்க் வெறுப்பை மட்டுமே பரப்புவதாகவும் அவர் கூறியதாகத்” தெரிவித்தனர்.
சார்லி கிர்க்கை கொல்வதற்காக நீண்டகாலமாக ராபின்சன் திட்டமிட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக யூட்டா மாகாண ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ் கூறுகையில், “அவர் டிஸ்கார்ட் என்னும் குறுஞ்செய்தி செயலியில், அவர் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியைப் புதரில் மறைத்து வைத்துவிட்டு ஆடையையும் மாற்றியுள்ளதாக அவரின் அறை நண்பரிடம் பகிர்ந்துள்ளார்.
ஒரு துண்டில் சுற்றி தன்னுடைய துப்பாக்கி மறைத்து வைத்ததாகவும், ஸ்கோப் பயன்படுத்தி சுட்டதாகவும், தன்னுடைய துப்பாக்கி ‘தனித்துவமானது(unique)’ என்றும் குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்” என்றார்.
துப்பாக்கிச் சூடு நடந்த செப்.10 ஆம் தேதி காலை 8.29 மணியளவில் டாட்ஜ் சேலஞ்சர் காரில் ராபின்சன் யூட்டா பல்கலைக்கழகத்திற்கு வந்தது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.
அவர் மெரூன் நிற டி-சர்ட், சாம்பல் நிற பேண்ட், வெள்ளை லோகோவுடன் கூடிய கருப்பு தொப்பி மற்றும் சாம்பல் நிற ஷூக்களையும் அணிந்திருந்தார். இரண்டு நாள்களுக்குப் பிறகு காவல் அதிகாரிகள் அவரை கண்டறிந்தபோதும் அவர் அதே உடையில் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 11 ஆம் தேதி குடும்பத்தினரை தொடர்பு கொண்ட ராபின்சன், கொலை தொடர்பானவற்றை வீட்டில் ஒப்புக்கொண்டுள்ளார். அதன் அடிப்படையிலேயே புலன் விசாரணை அதிகாரிகள் ராபின்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சார்லி கொலை தொடர்பாக 7,000 க்கும் மேற்பட்ட தடயங்களும் குறிப்புகளும் குவிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அமெரிக்காவையே உலுக்கிய இந்தப் படுகொலைக்கான தெளிவான காரணத்தை அதிகாரிகள் இன்னும் குறிப்பிடவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.