பாகிஸ்தானின், பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பலூசிஸ்தானின், குஸ்தார் மாவட்டத்தின் ஸெஹ்ரி பகுதியில் குடியிருப்பு வீடுகளைக் குறிவைத்து, நேற்று (செப்.17) நள்ளிரவு பாகிஸ்தானின் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதாக, பலூச் மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.
இந்தத் தாக்குதல்களில், 2 பெண்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், 4 வயது குழந்தை உள்பட 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மக்கள் வசிக்கும் பகுதிகளின் மீது போர் விமானங்கள் மற்றும் ராணுவ ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவது சர்வதேச மனிதாபிமான விதிகளை மீறும் செயல் எனக் கூறி பல்வேறு அமைப்புகள் பாகிஸ்தான் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும், கடந்த 2 மாதங்களில் மட்டும் ஸெஹ்ரி பகுதியில், பாகிஸ்தான் அரசுப் படைகள் 3 முறை வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் வளம்நிறைந்த மாகாணமான பலூசிஸ்தானில் வசிக்கும் பலூச் இனமக்கள், பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசின் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அவ்வப்போது, அரசுப் படைகளினால் பலூச் மக்கள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மாயமாக்கப்படும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதனால், நீண்டகாலமாகவே பலூசிஸ்தானை தனிநாடாக உருவாக்கவேண்டும் என பலூச் போராளிகள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறினாரா அதிபர் டிரம்ப்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.