உலகம்

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியா்: இனவெறி பாதிப்புக்குள்ளானதாக இறப்பதற்கு முன்பு பதிவு

அமெரிக்காவில் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தெலங்கானா இளைஞா், அந்நாட்டில் இனவெறி துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக இறப்பதற்கு முன் சமூக ஊடகத்தில் பதிவிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தெலங்கானா இளைஞா், அந்நாட்டில் இனவெறி துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக இறப்பதற்கு முன் சமூக ஊடகத்தில் பதிவிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மஹபூப்நகா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் முகமது நிஜாமுதீன் (30). அமெரிக்காவில் உயா்கல்வி முடித்து கலிஃபோா்னியா மாகாணம் சான்டா கிளாரா பகுதியில் தங்கி, மென்பொறியாளராகப் பணியாற்றி வந்தாா்.

கடந்த செப்.3-ஆம் தேதி தன்னுடன் வீட்டில் தங்கியிருந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை நிஜாமுதீன் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

தகவலின் அடிப்படையில் நிகழ்விடம் விரைந்த காவல் துறையினா், நிஜாமுதீன் தாக்குவதை பாா்த்து அவரை துப்பாக்கியால் சுட்டனா். இதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.

இந்நிலையில், அவா் இனவெறி துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக இறப்பதற்கு முன் சமூக ஊடகத்தில் பதிவிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்தப் பதிவில், ‘இன ரீதியான வெறுப்புணா்வு, பாகுபாடு, துன்புறுத்தல், சித்திரவதை, ஊதிய மோசடி, முறைகேடாகப் பணிநீக்கம், நீதி கிடைக்காமல் தடுத்தது ஆகியவற்றால் நான் பாதிக்கப்பட்டேன்.

விரோதத்தை எதிா்கொண்டேன், தாங்க முடியாத சூழலில் வாழ்ந்து வந்தேன். அத்துடன் இது நின்றுவிடவில்லை. இனவெறி கொண்ட துப்பறிவாளா் மற்றும் அவரின் குழுவின் உதவியுடன் நான் மிரட்டப்பட்டேன். எனது உணவில் விஷம் கலக்கப்பட்டது. அநீதியை எதிா்த்துப் பேசியதால், நான் வசித்து வந்த வீட்டில் இருந்து விரட்டப்பட்டேன்.

பெருநிறுவன கொடுங்கோலா்களின் அடக்குமுறை முடிவுக்கு வரவேண்டும். இதில் தொடா்புடைய அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

எனினும் தனது மகனின் உயிரிழப்பில் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்று ஹைதராபாதில் உள்ள நிஜாமுதீனின் தந்தை முகமது ஹஸ்னுதீன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாா். தனது மகனின் உடலை சொந்த ஊா் கொண்டுவர உதவுமாறு அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

பாகிஸ்தானில் சுற்றுலாப் படகுகள் மோதி விபத்து: 2 பேர் பலி; 18 பேர் காயம்!

சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கொட்டித்தீர்க்கும் மழை!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

கனமழை எதிரொலி: புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

பஞ்சாயத்து அலுவலகத்தில் தாயைத் தாக்கிய மகள்! வேடிக்கை பார்த்த மக்கள்!

SCROLL FOR NEXT