மலிவான வெளிநாட்டு ஊழியர்களை நீக்கிவிட்டு அமெரிக்கர்களை பணிக்கு நியமிக்கும் வகையில் ஹெச் - 1பி விசா விண்ணப்பத்திற்கான கட்டணத்தை ரூ. 88 லட்சமாக அமெரிக்கா உயர்த்தியுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
ஹெச் - 1பி விசா பெற்றுக்கொண்டு அமெரிக்காவில் செயல்பட்டுவரும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் பலர் பணிக்கு உள்ளதால், உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் விசா கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் தங்கி பணிபுரிய ஹெச் - 1பி விசா கட்டாயமாகும். இந்த விசா பெறுவதற்கு இனி 1 லட்சம் அமெரிக்க டாலர் (ரூ. 88 லட்சம்) கட்டணமாக வசூலிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிப்பதையே நோக்கமாகக் கொண்டிருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
''கணினி அறிவியல் படித்தவர்களிடையே நிலவும் வேலைவாய்ப்பின்மை 6.5 - 7.5% ஆக அதிகரித்துள்ளது. இது உயிரியல் மற்றும் வரலாறு படித்தவர்களிடையே நிலவும் வேலைவாய்ப்பின்மையை விட இருமடங்காகும்.
கடந்த 2000 - 2019 வரையிலான காலகட்டத்தில் கணினி அறிவியல் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் பயின்ற பிற நாட்டினருக்கான வேலைவாய்ப்பு அமெரிக்காவில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதேகாலகட்டத்தில் அமெரிக்காவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் பிரிவில் 44.5% மட்டுமே வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் எச் -1பி விசா வழங்கிவிட்டு, அதை விட அதிக எண்ணிக்கையில் உள்ளூர் பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாகவும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
''ஒரு மென்பொருள் நிறுவனம், 2025-ல் இதுவரை 5,189 எச் - 1பி விசா வழங்கி 16,000 அமெரிக்கர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. மற்றொரு நிறுவனம் 1,698 எச் - 1பி விசாக்களை வழங்கியுள்ளது. ஆனால், 2,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
மற்றொரு நிறுவனம் 2022ஆம் ஆண்டு முதல் 27,000 அமெரிக்கர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இதேவேளையில் 25,075 எச் 1-பி விசாக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இவற்றில் 71 - 72% வரையிலான எச் - 1பி விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது'' என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | எச்1பி விசா: அமெரிக்காவுக்கும் பாதிப்பா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.